‘மித்தோஸ் ஏஐ’ பெரும் அச்சுறுத்தல்: இந்தியா கவலை

‘மித்தோஸ் ஏஐ’ பெரும் அச்சுறுத்தல்: இந்தியா கவலை

2 mins read
ead278d0-06cd-44e6-80f5-aeb3d18a73af
நிர்மலா சீதாராமன். - எக்ஸ் தளம்/நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: ஆன்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய செயற்கை நுண்ணறிவு மாதிரி (ஏஐ மாடல்) ‘மித்தோஸ்’ இந்தியாவுக்குப் பெரும் ஆபத்தாக உருவெடுத்துள்ளது.

இந்தப் புதிய ‘ஏஐ’ மாதிரி நாட்டின் நிதித்துறைக்கும் வங்கிச் சேவைக்கும் எழுந்துள்ள அச்சுறுத்தல் என இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கணினி, இணையக் கட்டமைப்புகளில் உள்ள குறைபாடுகளை எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் உருவாகியுள்ள ‘மித்தோஸ் ஏஐ’ மாதிரி பல்வேறு தரப்பினருக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகப் பரவலாகப் பல்வேறு தரப்பினரும் கூறியுள்ளனர். இது இணைய வழித் தாக்குதல்களைத் தாமாக மேற்கொள்ளும் ஆபத்தான அம்சத்தைக் கொண்டுள்ளது.

இதையடுத்து, பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு மித்தோஸ் ஏஐ மாதிரியைப் பொதுப் பயன்பாட்டுக்காக வெளியிடப் போவதில்லை என ஆன்த்ரோபிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டுமே சோதனை அடிப்படையில் இந்த ஏஐ மாதிரியைப் பயன்படுத்தி வருகின்றன.

இந்தியாவின் தேசிய பரிவர்த்தனைக் கழகம், சில வங்கிகள் ஆகியவை இவற்றுள் அடங்கும்.

இந்நிறுவனங்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிய ‘மித்தோஸ் ஏஐ’ கைகொடுக்க வாய்ப்புள்ளதால் ஆன்த்ரோபிக் நிறுவனத்தின் அனுமதி கோரப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, ஆன்த்ரோபிக் நிறுவனம் தனது ‘சர்வர்’களை அமெரிக்காவுக்குள் பலத்த பாதுகாப்புடன் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

எனவே, வெளிநாட்டுச் சந்தைகளில் ‘மித்தோஸ் ஏஐ’ மாதிரியை பரிசோதிப்பதில் தொடர்ந்து சிக்கல்கள் நிலவுகின்றன.

இந்நிலையில், இந்தியாவில் பின்டெக் (நிதித் தொழில்நுட்பம்) வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ‘மித்தோஸ் ஏஐ’ ஏற்படுத்தக்கூடிய தாக்கம் கவலை அளிப்பதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் பாதுகாப்பு, பணப் பரிவர்த்தனைகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்வது காலத்தின் கட்டாயம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தொழில்நுட்பச் சவாலை எதிர்கொள்ள வங்கிகள் மிகுந்த விழிப்புடனும் தயார்நிலையுடனும் இருக்க வேண்டும் என டெல்லியில் நடைபெற்ற பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள், கணினிப் பாதுகாப்பு வல்லுநர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.

இந்திய வங்கிகள் சங்கம் உடனடியாகத் தற்காப்பு வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் வங்கி, நிதி நிறுவனங்களுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இணையப் பாதுகாப்புத் துறையில் தலைசிறந்த நிபுணர்களைப் பணியமர்த்தி, கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அமைச்சர் நிர்மலா சீதாராமன், சந்தேகத்துக்கிடமான பணப்பரிமாற்றங்கள் குறித்து உடனடியாகப் புகார்கள் பதிவு செய்யப்பட வேண்டும் எனக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்