புதுடெல்லி: நிர்ணயிக்கப்பட்ட இலக்கை, துல்லியமாகத் தாக்கிய பின்னர், தன்னைத் தானே அழித்துக்கொள்ளும் நவீன ஆளில்லா வானூர்திகளை (டிரோன்) இந்திய ராணுவம் கொள்முதல் செய்து வருகிறது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த நவீன வானூர்திகளுக்கு ‘நாகாஸ்திரா’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
‘சோலார் டிஃபென்ஸ் - ஏரோ ஸ்பேஸ்’ நிறுவனம் இந்த ‘டிரோனை’ உருவாக்கி உள்ளது. இதில் 80% உள்நாட்டுத் தயாரிப்பாகும்.
குறிப்பிட்ட தொலைவில் உள்ள இலக்குகளை, வெடி மருந்துகளைச் சுமந்து சென்று தாக்கியழிக்கும் திறன்கொண்டது ‘நாகாஸ்திரா 1ஆர்’ வகை டிரோன்.
இந்த டிரோன்களுக்காக ஏவுதளங்கள் மீண்டும் பயன்படுத்தக் கூடிய வகையில் உருவாக்கப்படுகின்றன.
360 டிகிரி சுழலும் கேமராக்கள், தகவல் தொடர்பு, இரவு நேரத் தாக்குதல்களுக்குப் பயன்படும் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ‘நாகாஸ்திரா’ வானூர்திகளில் இடம்பெற்றிருக்கும்.
காஷ்மீரின் லடாக், உத்தரப் பிரதேசத்தின் பாபினா உள்ளிட்ட பகுதிகளில் இந்த ‘டிரோன்’கள் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன.
இந்திய ராணுவத்துக்கு ‘நாகாஸ்திரா டிரோன்’ கூடுதல் பலம் சேர்க்கும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இந்திய ராணுவத்தின் துல்லியமாக இலக்கைத் தாக்கும் திறனை அதிகரிக்கவும் ராணுவத்தை நவீனமயப்படுத்தவும் நாகாஸ்திரா உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு 480 ‘நாகாஸ்திரா 1’ வகை டிரோன்களைக் கொள்முதல் செய்ய ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டது. தற்போது அந்த வானூர்திகள் மேலும் நவீனமயப் படுத்தப்பட்டுள்ளன.
இதையடுத்து 450 ‘நாகாஸ்திரா 1ஆர்’ வகை வானூர்திகள் கொள்முதல் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘நாகாஸ்திரா 1ஆர்’ வகையைத் ‘தற்கொலைப் படை டிரோன்’ என்று குறிப்பிடுகின்றனர். மிக உயரத்தில் இருந்து துல்லியமாகத் தாக்குதல் நடத்தும் திறன்படைத்தவை.
தற்போது உலக நாடுகள் பலவும் தங்கள் ராணுவ பலத்தை அதிகரிக்க, ஆளில்லா வானூர்திகளை அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.
அந்த வகையில், இந்தியாவும் ‘டிரோன்’ உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகிறது. போர் விமானங்களைவிட, ‘டிரோன்’கள் உற்பத்திக்கு செலவு குறைவுதான்.
அண்மையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே வெளியிட்ட மோதலின்போது, பாகிஸ்தான் ராணுவம் துருக்கியிடம் இருந்து பெற்ற ‘டிரோன்’களை இந்தியா மீது ஏவியது.
எனினும், நவீன ‘டிரோன்’ எதிர்ப்பு கட்டமைப்பைக் கொண்டு அந்த முயற்சியை இந்தியா தவிடுபொடியாக்கியது.
இதையடுத்து, இந்திய ராணுவத்துக்கு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட டிரோன்களை அதிக எண்ணிக்கையில் கொள்முதல் செய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.
இதற்கேற்ப, 80 விழுக்காடு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கருவிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் ‘டிரோன்’களை இந்திய ராணுவம் கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளது.
முதற்கட்டமாக, ‘நாகாஸ்திரா’ வகை டிரோன்கள் இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளன.