நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன முதலைப்பட்டி பகுதியில், பாதாள சாக்கடை பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் 4வது வார்டு பகுதியில் வசிக்கும் மணிகண்டன் - ரதிபிரியா தம்பதியினரின் 4 வயது மகன் ரோகித். வியாழக்கிழமை மாலை (ஜனவரி 1) வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், எதிர்பாராத விதமாக வீட்டின் அருகே இருந்த பாதாள சாக்கடைக்காகத் தோண்டப்பட்ட குழிக்குள் விழுந்துள்ளார். நீண்ட நேரமாகச் சிறுவனைக் காணாததால் பெற்றோர் தேடியபோது, நீரில் நிரம்பியிருந்த குழிக்குள் சிறுவன் சடலமாகக் கிடப்பது கண்டறியப்பட்டது.
தகவலறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் சிறுவன் ரோகித் சடலத்தை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சுமார் 5 அடி ஆழம் கொண்ட அந்தக் குழியில் ஊற்று நீர் தேங்கியிருந்துள்ளது. பொது விடுமுறை தினம் என்பதால் பணிகள் நடைபெறாத நிலையில், குழிக்கு முறையான பாதுகாப்புத் தடுப்புகள் அமைக்கப்படவில்லை என்றும் பெயரளவிற்கு கட்டப்பட்டிருந்த கயிறும் அறுந்து கிடந்ததே விபத்திற்குக் காரணம் என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே இந்த உயிர் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், சிறுவனின் குடும்பத்திற்கு நாமக்கல் மாநகராட்சி சார்பில் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

