கேரளம் எனப் பெயர் மாற்றம்: பிரதமருக்கு பாஜக தலைவர் கடிதம்

1 mins read
38c764da-69f7-4c01-9c92-53f548a1b077
கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர். - படம்: பிடிஐ

திருவனந்தபுரம்: கேரளா என்ற பெயரை அதிகாரத்துவமாக ‘கேரளம்’ என மாற்றும் விவகாரத்தில் தலையிடக் கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அம்மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 2024 ஜூன் மாதம், அரசுப் பதிவுகளில் கேரளம் எனப் பெயர் மாற்றம் செய்வது தொடர்பில் கேரளச் சட்டமன்றத்தில் சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டதைத் திரு ராஜீவ் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சட்டமன்றத்தின் முடிவை ஏற்றுக்கொள்வதாகக் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் ஒரு கடிதம் எழுதியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

‘கேரளம்’ என்ற பெயரே தமது மாநிலத்தின் மரபையும் பண்பாட்டையும் சிறப்பாக வெளிப்படுத்துவதாக பாஜக கருதுகிறது என்று திரு ராஜீவ் கூறியிருக்கிறார்.

பிரதமருக்கான தமது கடிதத்தில், கேரளத்தின் செழுமையான பாரம்பரியத்தை மீட்டெடுக்கவும் பாதுகாக்கவும் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து செயல்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எல்லாச் சமய இனங்களின் நம்பிக்கைகளையும் வழக்கங்களையும் மதித்துப் பேணுவதன்மூலம் வளர்ந்த, பாதுகாப்பான கேரளத்தை உருவாக்க முடியும் என்றும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

‘கேரளம்’ என்ற பெயரை அதிகாரத்துவமாக ஏற்றுக்கொள்வது, சமய அடிப்படையில் மாவட்டங்களைப் பிரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கும், மாநிலத்தைத் துண்டாட நினைக்கும் தீவிரவாதக் குழுக்களின் முயற்சிகளை முறியடிக்க உதவும் என்றும் திரு ராஜீவ் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்