புயல் நினைவாக பத்துக் குழந்தைகளுக்கு ‘டாணா’ பெயர்

புயல் நினைவாக பத்துக் குழந்தைகளுக்கு ‘டாணா’ பெயர்

1 mins read
5f28bd78-fdb9-4405-a34f-a1b40cdb966e
‘டாணா’ புயலின்போது ஒடிசாவில் பிறந்த ஒரு குழந்தை. - படம்: ஒடிசா டிவி

புவனேஸ்வர்: பெருஞ்சேதத்தை விளைவிக்க வல்லதாக இருந்தாலும் இயற்கைப் பேரிடர் காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அப்பேரிடரின் நினைவாகப் பெயரிடுவது அவ்வப்போது நிகழத்தான் செய்கிறது.

அவ்வகையில், வங்கக் கடலில் உருவான ‘டாணா’ புயல் இம்மாதம் 25ஆம் தேதி கரையைக் கடந்தது.

அன்றைய நாளில் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பிறந்த குழந்தைகளில் பத்துப் பேருக்கு ‘டாணா’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

புயல் கரையைக் கடக்கவிருப்பதை ஒட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா மாநிலத்தில் ஏறக்குறைய 600,000 பேர், 6,008 தற்காலிகக் காப்பிடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

பாதுகாப்பு கருதி, 4,000க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் ஏறக்குறைய 2,200 பேருக்கு அக்டோபர் 23, 24ஆம் தேதிகளில் குழந்தை பிறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக, 18 பேர் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்ததாக ‘ஒடிசா டிவி’ செய்தி கூறியது.

பிறந்த பத்து குழந்தைகளுக்கு ‘டாணா’ எனப் பெயர் சூட்டப்பட்டது. வேறு சிலர், ‘டாணாப்’, ‘டண்வீர்’, ‘டாணாபதி’ எனப் பெயரிட்டனர்.

கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த ஊர்வசி நகாக் என்பவருக்கு இரட்டைப் பிள்ளைகள் பிறந்தன. தங்கள் மகனுக்கு ‘டாணா’ எனவும் மகளுக்கு ‘டாணாபதி’ எனப் பெயர் சூட்டத் திட்டமிட்டிருப்பதாக அவர் கூறினார்.

டாணா புயலின்போது, ஒடிசாவின் அண்டை மாநிலமான மேற்கு வங்க மாநிலத்தின் 24 பர்கானாஸ், மேற்கு மிட்னாப்பூர் மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு நிவாரண மையங்களில் 392 குழந்தைகள் பிறந்தன.

குறிப்புச் சொற்கள்