புதுடெல்லி: இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணி (எஸ்ஐஆர்) ஓராண்டு நிறைவை எட்டியுள்ளது.
நாடு தழுவிய வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முழுவதும் உள்ள வாக்காளர் பட்டியலிலிருந்து கிட்டத்தட்ட ஆறு கோடிப் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக, 2025 ஜூன் 24ஆம் தேதி பீகாரில் ஒரு முன்னோட்டமாகத் தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கை, பின்னர் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.
உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, ராஜஸ்தான், சத்தீஸ்கர், கேரளா, குஜராத், மத்தியப் பிரதேசம், கோவா ஆகிய 9 மாநிலங்களிலும் புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு ஆகிய 3 யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணி பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது.
பின்னர் அந்தப் பகுதிகளுக்கான இறுதிப் பட்டியல்கள் வெளியிடப்பட்டன. அதில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 50.99 கோடியிலிருந்து 45.81 கோடியாகக் குறைந்தது. 5.18 கோடிக்கும் அதிகமானோரின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டன. பீகார் வாக்காளர் பட்டியலிலிருந்து ஏற்கெனவே 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன.
ஓராண்டு காலத்தில் நீக்கப்பட்ட பெயர்களில் உயிரிழந்த 66.88 லட்சம் பேரின் பெயர்களும் அடங்கும். அவற்றில் உத்தரப் பிரதேசத்தில் இறந்த 25.47 லட்சம் பேரின் பெயர்களும் மேற்கு வங்காளத்தில் இறந்த 24.16 லட்சம் பேரின் பெயர்களும் நீக்கப்பட்டன.

