திருவனந்தபுரம்: பெண்களுக்கு ‘சேனிட்டரி நாப்கின்’ வழங்கும் இயந்திரத்தை கேரள அரசாங்கம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) திறக்க உள்ளது.
மாநிலம் முழுவதும் அதுபோன்ற இயந்திரங்களை நிறுவி, பெண்களின் சுகாதாரத்திற்கு உதவ, ஆளும் காங்கிரஸ் கட்சி அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தது.
காங்கிரஸ் அரசு பதவி ஏற்று நூறு நாள்களைக் கடந்துள்ள நிலையில், தற்போது அந்த வாக்குறுதியை அக்கட்சி நிறைவேற்றத் தொடங்கி உள்ளது.
அதற்காக, ‘பயணத்தில் இருக்கும் பெண்களின் மாதவிடாய்த் தேவைகள்’ என்ற பெயரில் திட்டம் ஒன்று போடப்பட்டுள்ளது.
அந்தத் திட்டத்தின்படி, கேரளம் முழுவதும் உள்ள சுற்றுப்பயணத் தலங்கள், அரசுப் பேருந்து நிலையங்கள், மக்கள் அதிகம் ஒன்றுகூடும் பொது இடங்களில் நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்படும்.
முதல் இயந்திரம் திருவனந்தபுரத்தின் மத்தியிலுள்ள தம்பனூர் அரசுப் பேருந்து நிலையத்தில் வரும் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) திறக்கப்பட உள்ளது. கேரளம் மகளிர், குழந்தை மேம்பாட்டு அமைச்சர் பிந்து கிருஷ்ணா அந்த இயந்திரத்தை அதிகாரபூர்வமாகத் திறந்து வைப்பார்.
பயணத்தில் இருக்கும்போது நாப்கின் தேவைப்படும் பெண்களும் சிறுமியரும் அந்த இயந்திரத்தில் சலுகை விலையில் அதனைப் பெற்றுக்கொள்ளலாம்.
பயன்படுத்திய நாப்கின்களை சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்துவதற்கான வசதிகளும் இயந்திரங்களின் அருகில் அமைக்கப்படு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணத்தின் போது மாதவிடாய் கால சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதையும் பொது இடங்களில் அத்தியாவசியமான மாதவிடாய் சுகாதாரப் பொருள்களைப் பெண்கள் எளிதாகப் பெறுவதை உறுதி செய்வதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என மகளிர், குழந்தை மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.
