புதுடெல்லி: பத்தாண்டுக் காலத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு 82 விழுக்காடு அதிகரித்துள்ளது.
கடந்த 2014ல் ரூ.1.65 கோடியாக இருந்த அவரது சொத்து மதிப்பு 2024ல் ரூ.3.02 கோடியாக உயர்ந்தது. அதுபோல, 2014ல் ரூ.9.40 கோடியாக இருந்த நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு 117% கூடி 2024ல் ரூ.20.39 கோடியாக அதிகரித்தது.
கடந்த 2014 முதல் 2024 வரை தொடர்ந்து மூன்று தேர்தல்களில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 102 பேரின் சொத்து மதிப்பு சராசரியாக 110 விழுக்காடு அதிகரித்துள்ளதாக ஒரு பகுப்பாய்வு தெரிவிக்கிறது.
பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அந்த எம்.பி.க்களின் சராசரி சொத்து மதிப்பு கடந்த 2014ஆம் ஆண்டில் ரூ.15.76 கோடியாக இருந்தது. பின்னர் அது 2019ல் ரூ.24.21 கோடியாகவும் 2024ல் ரூ.33.13 கோடியாகவும் உயர்ந்தது.
இந்தப் பத்தாண்டுக் காலத்தில் அந்த 102 எம்.பி.க்களின் சொத்து மதிப்பு சராசரியாக ரூ.17.386 கோடி அதிகரித்தது. ஜனநாயகச் சீர்திருத்தச் சங்கம், தேசியத் தேர்தல் கண்காணிப்பு என்ற இரு அமைப்புகள் வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தரவுகள் இடம்பெற்றுள்ளன. அந்த 102 எம்.பி.க்களும் தாக்கல் செய்த உறுதிமொழிப் பத்திரங்களின் அடிப்படையில் அவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், சாத்தாரா தொகுதியின் பாஜக எம்.பி. உதயன்ராஜே போன்ஸ்லே அந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 2014லிருந்து 2024க்குள் அவரது சொத்து மதிப்பு ரூ.162.51 கோடி உயர்ந்துவிட்டது.
அதுபோல, குஜராத் மாநிலம், ஜாம்நகர் தொகுதியின் பாஜக எம்.பி. பூனம்பென்னின் சொத்து மதிப்பு ரூ.130.26 கோடி கூடியது. ரூ.124.25 கோடி உயர்வுடன் மூன்றாமிடத்தைப் பிடித்தார் ஆந்திராவின் ராஜம்பேட் தொகுதி எம்.பி.யான ஒய்எஸ்ஆர் காங்கிரசின் பி.வி. மிதுன் ரெட்டி.
மகாராஷ்டிராவின் கல்யாண் தொகுதியைச் சேர்ந்த சிவசேனை எம்.பி. ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டேவின் சொத்து மதிப்பு 148.5 மடங்கு கூடியுள்ளது. கடந்த 2014ல் ரூ.9.98 லட்சமாக இருந்த அவரது சொத்து மதிப்பு, 2024ல் ரூ.14.92 கோடியாக அதிகரித்தது.

