ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தீ; 179 பேர் உயிர்தப்பினர்

2 mins read
ஒரு வாரத்திற்குள் இரண்டாவது சம்பவம்
4bd0c78d-6947-4542-ae09-0cb964bf375b
பெங்களூரு அனைத்துலக விமான நிலையத்தில் முழு அளவிலான அவசரநிலை பிறப்பிக்கப்பட்டு, விமானம் தரையிறங்கியதும் விரைந்து தீ அணைக்கப்பட்டது. - படம்: இந்திய ஊடகம்

புனே: பெங்களூரு விமான நிலையத்திலிருந்து கிளம்பிய பத்து நிமிடங்களில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான இயந்திரத்தில் தீப்பிடித்ததை அடுத்து, அவ்விமானம் மீண்டும் பெங்களூருக்கே திரும்பியது.

இதனால் அதிலிருந்த 179 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். பின்னர் அவர்கள் 13 மணி நேரக் காத்திருப்பிற்குப்பின் வேறு விமானத்தில் ஏற்றி அனுப்பப்பட்டனர்.

கடந்த சனிக்கிழமை இரவு புனே நகரிலிருந்து பெங்களூரு வழியாக கொச்சி நகருக்கு IX-1132 என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயக்கப்பட்டது. பெங்களூரில் இறங்கி, மீண்டும் கிளம்பி, கொச்சி நோக்கிச் சென்றபோது அவ்விமானத்தில் தீப்பிடித்தது.

இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்றும் அதன் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி, தீப்பிடித்ததற்கான காரணம் கண்டறியப்படும் என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனப் பேச்சாளர் தெரிவித்தார்.

“இரவு 10.50 மணிக்கு விமானம் பெங்களூரிலிருந்து கிளம்பியது. கிட்டத்தட்ட 11 மணியளவில் இயந்திரம் தீப்பற்றியதைச் சன்னல் வழியாகக் கண்டோம். இதனையடுத்து, 11.15 மணிக்கு விமானம் பெங்களூரில் தரையிறக்கப்பட்டது,” என்று அதில் பயணம் செய்த பியானோ தாமஸ் என்பவர் கூறினார்.

இதனையடுத்து, “முழு அளவிலான அவசரநிலை பிறப்பிக்கப்பட்டு, விமானம் தரையிறங்கியதும் விரைவாகத் தீ அணைக்கப்பட்டது,” என்று பெங்களூரு அனைத்துலக விமான நிலையப் பேச்சாளர் தெரிவித்தார்.

இச்சம்பவம் நிகழ்ந்த அதே நாளில், 137 பயணிகளுடன் பெங்களூரு நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதற்கு முதல்நாள் 17ஆம் தேதி, டெல்லி - பெங்களூரு விமானத்தின் துணை மின்னமைப்பிலிருந்து கிளம்பிய தீ எச்சரிக்கை ஒலி காரணமாக அவ்விமானம் மீண்டும் டெல்லிக்கே திரும்பியது. அவ்விமானத்தில் 175 பயணிகள் இருந்தனர்.

குறிப்புச் சொற்கள்