புதுடெல்லி: முன்னாள் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு 2 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.
அனைத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளும் தேசிய ஊக்க மருந்து தடுப்பு முறையில் ஆர்டிபியில் பதிவு செய்வது வழக்கமான ஒன்று. அதாவது, ஊக்க மருந்து சோதனைக்கு நான் தயாராக இருக்கிறேன் என்று இடம், தேதி, நேரம் எல்லாம் கொடுப்பதைத்தான் அப்படி சொல்லுவார்கள்.
அப்படி குறிப்பிட்ட இடத்தில் நேரத்தில் அந்தச் சோதனைக்கு முன்னிலையாகாமல் இருந்தால் அதற்கு ‘வேரபவுட்ஸ் ஃபெய்லியர்’ (whereabouts failure) என்று குறிப்பிடப்படுகிறது.
இதில் தவறியதால் தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது. அக்கடிதத்தில், “வினேஷ் போகத் ஹரியானா மாநிலம் சோனிபட்டில் செப்டம்பர் 9ஆம் தேதி இரவு 10.00 மணிக்கு நீங்கள் பரிசோதனைக்குத் தயாராக இருந்திருக்க வேண்டும். ஆனால், எங்களது பரிசோதகர் வரும் வேளையில் நீங்கள் அந்த இடத்தில் இல்லை.
“இந்த விவகாரத்தில் நாங்கள் இறுதி முடிவு எடுப்பதற்குள் நீங்கள் இதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும். நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் நேரத்தில் சோதனைக்கு முன்னிலையாகவில்லை. ஒன்று நீங்கள் முன்னிலையாகவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லது குறிப்பிடப்பட்ட அந்த 60 நிமிடத்தில் வீட்டில்தான் இருந்தீர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். அதற்காக 2 வாரம் அவகாசம் அளிக்கப்படுகிறது,” எனக் கூறப்பட்டுள்ளது.
‘வேரபவுட்ஸ் ஃபெய்லியர்’ என்பது ஊக்க மருந்து பயன்படுத்தியதாக அர்த்தம் ஆகாது. ஆனால், 12 மாத இடைவெளிகளில் 3 முறை இந்தச் சோதனையைச் செய்யத் தவறினால் அதற்காக தண்டனை விதிக்கப்படும்.
காங்கிரசில் வினேஷ் போகத்
பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் முதல்முறையாக இந்தியாவை சேர்ந்த வினேஷ் போகத் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
ஆனால், கடைசி நிமிடத்தில் 100 கிராம் கூடுதல் எடை இருந்ததால் அவர் தகுதிநீக்கம் செய்யப்படுவதாக ஒலிம்பிக் அமைப்பு அறிவித்தது. இறுதிச் சுற்று வரை முன்னேறியதால், அவருக்கு வெள்ளிப் பதக்கத்தை வழங்க வேண்டும் என்று உலகம் முழுவதும் குரல் எழுந்தது.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், அனைவரின் கோரிக்கைகளையும் ஒலிம்பிக் சங்கம் நிராகரித்துவிட்டது. பிறகு ஓய்வை அறிவித்த வினேஷ் போகத் ரயில்வே பணியிலிருந்து விலகினார். பின்னர், செப்டம்பர் 6ல் காங்கிரசில் இணைந்து ஜுலானா தொகுதியில் போட்டியிடுவதும் குறிப்பிடத்தக்கது.