இந்தியாவின் உற்பத்தித் துறை வளர்ச்சிக்கும், வளர்ந்துவரும் துறைகளில் திறன்மிக்க மனிதவளத் தேவைக்கும் ஆதரவளிக்கும் வண்ணம் நவீன உற்பத்தித் துறைக்கான தேசிய உன்னத நிலையம் தமிழ்நாட்டின் சென்னை நகரில் அமைக்கப்படவுள்ளது.
சென்னையில் இயங்கிவரும் தேசிய திறன் பயிற்சிக் கழகத்தில் இந்த நிலையம் அமையும்.
பகுதி மின்கடத்தி, மின்னியல், விமானத்துறை சார்ந்த அம்சங்களில் திறன்மிக்க மனிதவளத் தேவையைப் பூர்த்திசெய்ய இந்த நிலையம் உதவும்.
இந்தியாவின் திறன் மேம்பாடு, தொழில்முனைப்பு அமைச்சுக்கும் சிங்கப்பூரின் வர்த்தக, தொழில் அமைச்சுக்கும் இடையில் இந்த நிலையத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சிங்கப்பூர் சார்பில் இந்தியாவிற்கான சிங்கப்பூர்த் தூதர் சைமன் வோங்கும் இந்தியா சார்பில் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியும் புதுடெல்லியில் இருநாட்டுப் பிரதமர்களின் முன்னிலையில் அந்த ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனர்.
இந்தியாவின் உலகளாவியப் பங்காளி என்ற முறையில் பாடத்திட்ட மேம்பாடு மற்றும் தரநிலைகளை இந்தியாவுடன் இணைந்து சிங்கப்பூர் உருவாக்கும்.
அத்துடன், பயிற்றுநர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும் முனையும். சிங்கப்பூரின் நிபுணர்களும் பயிற்றுநர்களும் சென்னையில் அமையும் இந்த தேசிய உன்னத நிலையத்திற்குச் சென்று பயிற்சி அளிப்பர். இருநாடுகளும் இணைந்து உருவாக்கும் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான புத்தாக்க கற்றல் முறைகளையும் நடைமுறை அனுபவங்களையும் இந்தியப் பயிற்றுநர்களுக்கு வழங்க முனைவார்கள்.
இந்த ஒப்பந்தத்தின்கீழ் இந்தியாவின் திறன் சான்றிதழ் கட்டமைப்பையும் இருநாடுகளும் இணைந்து உருவாக்கும். தரநிலைகளைப் போட்டித்தன்மையுடன் வைத்திருக்க ஆவன செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இருநாட்டு மாணவர்களுக்கும் பயிற்றுநர்களுக்கும் வேலைப் பயிற்சி, தொழில்துறை வேலை அனுபவம், கற்றல் பயணங்கள், போட்டிகள், ஆய்வு ஒத்துழைப்புகள் போன்ற பலன்களும் இந்த ஒப்பந்தத்தின்கீழ் கிட்டும்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐந்தாண்டுகளுக்கு நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

