நேஷனல் ஹெரால்ட் வழக்கு: சோனியா, ராகுல் காந்திமீது குற்றப்பத்திரிகை தாக்கல்

2 mins read
ce10367d-caae-415d-abba-73e312fc106d
புதுடெல்லியில் உள்ள அக்பர் சாலையில் இருக்கும் அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுவின் அலுவலகத்திற்கு வெளியே மத்தியில் ஆளும் பாஜகவைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்கள். - படம்: சுஷில் குமார் வர்மா

புதுடெல்லி: ‘நேஷனல் ஹெரால்டு’ நாளிதழின் சொத்து பரிவர்த்தனையில் பண மோசடி நடந்ததாக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி ஆகியோர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஏப்ரல் 25ஆம் தேதிக்குச் சிறப்பு நீதிபதி ஒத்தி வைத்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் நேருவின் ‘அசோசியேட்டட் ஜர்னல்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் ‘நேஷனல் ஹெரால்டு’ நாளிதழ் கடந்த 1938ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

அதில் 5,000க்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர். நிதிப் பற்றாக்குறை காரணமாக அந்நாளிதழ் கடந்த 2008ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

அந்நிலையில், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் ரூ.50 லட்சம் செலுத்தி ‘அசோசியேட்டட் ஜர்னல்ஸ்’ நிறுவனத்தின் ரூ.2,000 கோடி மதிப்பிலான சொத்துக்களைக் கையகப்படுத்தியது.

அந்நிறுவனத்தைக் கையகப்படுத்திய நடவடிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக பாஜகவின் சுப்பிரமணிய சாமி குற்றம்சாட்டினார். டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர்களை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்தார். அவ்வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத்துறையும் மத்தியப் புலனாய்வுப் பிரிவும் 2021ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் முக்கிய தலைவர்களிடம் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டது.

அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.661 கோடி அசையா சொத்துகளையும் ரூ.90 கோடி பங்குகளையும் அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. ரூ.988 கோடி மோசடி நடந்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் சோனியா, ராகுல் காந்தியை தவிர, காங்கிரஸ் வெளிநாட்டுப் பிரிவுத் தலைவர் சாம் பிட்ரோடா, சுமன் துபே, சுனில் பண்டாரி ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர்கள்மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததைக் கண்டித்து, அக்கட்சித் தொண்டர்கள் புதன்கிழமை (ஏப்ரல் 16) டெல்லியில் போராட்டம் நடத்தினர்.

குறிப்புச் சொற்கள்