புதுடெல்லி: இந்தியாவில் உள்ள 150,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலைகளைப் பராமரிக்க செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேசிய நெடுஞ்சாலைகளில் பள்ளங்கள், விரிசல்கள், தேய்மானம், வெள்ளைநிறக் குறியீடுகள் தேய்மானம் ஆகியனவற்றை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் கண்டறியப்படும்.
இதற்காக, மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும், சட்டவிரோத வாகன நிறுத்தம், அதிகாரபூர்வமற்ற அறிவிப்புப் பலகைகள், சேதமுற்ற அறிவிப்புப் பலகைகள், தெருவிளக்குகள், நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவற்றையும் அந்தப் புதிய தொழில்நுட்பம் மூலம் கண்டறிய முடியும்.
அந்தக் குறைபாடுகளை செயற்கை நுண்ணறிவு காணொளிகளாகப் பதிவு செய்து வழங்கும். அதன் அடிப்படையில் அவற்றுக்குத் தீர்வுகாணப்படும்.
இந்த முயற்சியின் முதல்கட்டமாக, 38,102 கிலோமீட்டர் நீளத்துக்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் கண்காணிப்பு வசதிகள் செயல்படுத்தப்படவுள்ளன. அவற்றில் தமிழகத்தின் 8,400 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகளும் அடங்கும்.
இந்தியாவில் 66,950 கிலோமீட்டர் தூரத்துக்கு உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் நாட்டின் 40 விழுக்காடு போக்குவரத்து நடைபெறுகிறது.
இந்தியாவின் ஆகப்பெரிய நெடுஞ்சாலையாக ‘நெடுஞ்சாலை எண் 44’ (NH 44) உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
வடஇந்தியாவின் ஷிரிநகரில் தொடங்கி தென்னிந்தியாவில் கன்னியாகுமரி வரை அந்த நெடுஞ்சாலை நீள்கிறது.
அதேபோல, நாட்டிலேயே மிகவும் குறைந்த தூரத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ‘தேசிய நெடுஞ்சாலை எண் 47A’ (NH47A) ஆகும். அதன் நீளம் வெறும் 6 கிலோமீட்டர்தான்.
கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள குண்டனூரையும் கொச்சி துறைமுகம் அமைந்துள்ள வெலிங்டன் தீவையும் அந்த நெடுஞ்சாலை இணைக்கிறது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் பாதுகாப்பானவையாக இருப்பதை உறுதி செய்வதுடன் உலகத்தரத்துக்கு அவற்றை உயர்த்தவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.

