தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கஞ்சா கடத்தல்காரராக மாறிய தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோ வீரர்

2 mins read
147a1255-7867-4da5-a034-45af99215363
கைது செய்யப்பட்ட கமாண்டோ வீரர் பஜ்ரங் சிங். - படம்: ஊடகம்

ஜெய்ப்பூர்: தாய்நாட்டைக் காக்க உயிரைப் பணயம் வைத்து மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் போது, வீர தீரத்துடன் பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடிய கமாண்டோ வீரர் ஒருவர், கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்புப் படையில் பணியாற்றி, ஓய்வுபெற்ற வீரர் ஒருவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பதாக ராஜஸ்தான் மாநில காவல்துறைக்கு அண்மையில் ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த வீரரைப் பற்றி கூடுதல் தகவல் தந்தால் ரூ.25 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது.

மேலும், போதைப்பொருள் வலையமைப்பை வேரோடு வீழ்த்த ‘ஆப்பரேஷன் காஞ்ஜனே’ என்ற நடவடிக்கையும் தொடங்கப்பட்டது.

கடந்த இரண்டு மாதங்களாக தேடுதல் வேட்டை நீடித்து வந்த நிலையில், ராஜஸ்தானின் சுரு பகுதியில் பஜ்ரங் சிங் என்ற அந்த முன்னாள் வீரர் கைதானார். அவரிடம் இருந்து 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக ராஜஸ்தான் காவல்துறைத் தலைவர் விகாஸ் குமார் தெரிவித்தார்.

“பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள பஜ்ரங் சிங், தொடக்கத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையில்தான் பணியாற்றி வந்துள்ளார். அவரது சிறப்பான செயல்பாடுகள் காரணமாக தேசிய பாதுகாப்புப் படைக்குத் தேர்வு செய்யப்பட்டு, அதில் ஏழு ஆண்டுகள் கமாண்டோவாகப் பணியாற்றினார்.

“கடந்த 2008ஆம் ஆண்டு மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின்போது பஜ்ரங் சிங், தனது உயிரைப் பொருட்படுத்தாமல் பயங்கரவாதிகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டார். இதனால் அவர் கதாநாயகனைப் போல் போற்றப்பட்டார்,” என்றார் விகாஸ் குமார்.

எனினும், 2021ல் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின் அரசியலில் ஈடுபட்ட பஜ்ரங் சிங்கால் அதில் சாதிக்க முடியவில்லை.

இதனால் தெலுங்கானா, ஒடிசாவில் இருந்து ராஜஸ்தானுக்கு கஞ்சா கடத்திவரத் தொடங்கியதாக அவர் மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்