இந்தியா முழுவதும் 17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி புதன்கிழமை (ஜூலை 9) பொது வேலைநிறுத்தம் நடத்தப் போவதாக மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊழியர்களைப் பாதிக்கும் வகையில் அமல்படுத்த உள்ள நான்கு சட்டத் தொகுப்புகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் இப்போராட்டத்திற்கு திமுகவின் தொமுச, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிஐடியு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏஐடியூசி, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
ஆளுங்கட்சியான திமுகவின் தொழிற்சங்கம் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதால் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாது எனத் தெரிகிறது.
அதேசமயத்தில், அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்காது என்பதால் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் இயக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
சிஐடியுவில் ஆட்டோ தொழிலாளர்கள் அதிகளவில் அங்கம் வகிப்பதால் பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடுவதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
வணிகர் சங்கங்கள் இப்போராட்டத்திற்கு இதுவரை ஆதரவு தெரிவிக்காததால் கடைகள், வணிக நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்படும் என்று நம்பப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர் சங்கங்களின் இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் 25 கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என அனைத்து இந்திய வர்த்தகக் காங்கிரஸ் நிர்வாகி அமர்ஜீத் கவுர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், விவசாயிகளும் கிராமப்புற தொழிலாளர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக வங்கித்துறை அறிவித்து உள்ளது. இதேபோல், காப்பீட்டுத் துறையும் இணைவதாகக் கூறியுள்ளது.