நவி மும்பை: உலகெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படும் வேளையில் வியாழக்கிழமை (டிசம்பர் 25), நவி மும்பை அனைத்துலக விமான நிலையம் அதன் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது.
வர்த்தக ரீதியில் சேவை வழங்கும் முதல் விமானத்தை வியாழக்கிழமை காலை 8 மணிக்கு அது கோலாகலமாக வரவேற்றது.
பெங்களூரில் புறப்பட்டு நவி மும்பை விமான நிலையத்தில் முதலில் தரையிறங்கிய அந்த இண்டிகோ 6E460 விமானத்திற்கு ‘வாட்டர் சல்யூட்’ எனப்படும் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமானப் போக்குவரத்துத் துறையின் பாரம்பரியமான இச்சடங்கில் தீயணைப்பு வாகனங்கள் ஓடுபாதையில் மெதுவாகச் செல்லும் விமானத்தின்மேல் தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பது வழக்கம்.
அந்த விமானம் தரையிறங்குவதற்குமுன் இண்டிகோ நிறுவன ஊழியர்கள் தங்கள் பாரம்பரியப்படி, கேக் வெட்டியும் தேங்காய்களை உடைத்தும் கொண்டாடினர்.
பின்னர், காலை 8.40 மணியளவில் இண்டிகோ விமான நிறுவனத்தின் 6E882 விமானம், நவி மும்பை விமான நிலையத்திலிருந்து ஹைதராபாத்திற்குப் புறப்பட்டது.
நவி மும்பை விமான நிலையத்திற்கு 2018ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த ஆண்டு (2025) அக்டோபர் 8ஆம் தேதி, நிலையத்தை அவர் திறந்து வைத்தார்.
தற்போது சேவையைத் தொடங்கியுள்ள இந்த விமான நிலையம், மும்பை அனைத்துலக விமான நிலையத்தில் காணப்படும் நெரிசலைக் கணிசமாகக் குறைக்க உதவும் என்று கருதப்படுகிறது.

