மார்ச் 31க்குள் நக்சல் பயங்கரவாதம் முடிவுக்குவரும்: அமித்ஷா திட்டவட்டம்

மார்ச் 31க்குள் நக்சல் பயங்கரவாதம் முடிவுக்குவரும்: அமித்ஷா திட்டவட்டம்

2 mins read
47c589e0-28de-4035-a70a-c36cbe0341ee
பல தலைமுறைகளை வறுமையின் பிடியில் சிக்கவைத்த, கல்வி கற்க விடாமல் சமூகத்தை இருளில் தள்ளிய நக்சல்வாதத்திலிருந்து நாடு விடுவிக்கப்பட உள்ளது என்று உறுதிகூறினார் இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. - கோப்புப் படம்: பிடிஐ

ராய்ப்பூர்: நாட்டில் நக்சல் அச்சுறுத்தல் மார்ச் 31க்குள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார் இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

சத்தீஸ்கரில்  காணப்படும் இடதுசாரி தீவிரவாதம், அது சார்ந்த பாதுகாப்பு மறுஆய்வு தொடர்பான உச்சநிலை கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார் அமைச்சர் அமித்ஷா.

அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய திரு அமித்ஷா, ‘‘இன்னும் சில வாரங்களில் அதாவது இந்த ஆண்டின் மார்ச் 31ம் தேதிக்குள்ளாக நக்சல் அட்டகாசம் முழுவதுமாக துடைத்தொழிக்கப்படும்,’’ என்று உறுதி கூறினார்.

சத்தீஸ்கரில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்துப் பேசிய அவர், ஒருகாலத்தில் நக்சல்களின் பயங்கரவாதப் பிடியில் சிக்கி அவர்களின் கோட்டையாக கிடந்த சத்தீஸ்கர், தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமைத்துவத்தின்கீழ் முன்னேற்றத்தின் அடையாளமாக மறுமலர்ச்சி அடைந்து வருவதாக கூறினார். 

தொடர்ந்து உரையாற்றிய அவர், மோடி அரசாங்கத்தின் கீழ், நக்சல் பயங்கரவாதம் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

வரும் 2026 மார்ச் 31க்கு முன்பு இந்தியா முற்றிலும் நக்சல் இல்லாத நாடாக உருமாறும்,’’ என்று கூறினார்.

மத்திய, மாநில அரசாங்கங்களின் பாதுகாப்பு சார்ந்த உத்திகள், உள்கட்டமைப்பு வடிவமைப்புகள், நக்சல் குழுக்கள் மீது எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கைகள், அவர்கள் தானாகவே முன்வந்து சரணடைதல் தொடர்பான கொள்கைகள் ஆகியவை இவ்விவகாரத்தில் நேர்மறையான முடிவுகளை நாட்டுக்கு நல்கியுள்ளது என்றும் விளக்கினார் திரு அமித்ஷா.

சத்தீஸ்கர் இளையர்கள் குறித்தும் தன் உரையின்போது பேசினார் உள்துறை அமைச்சர்.

‘‘சத்தீஸ்கர் இளையர்கள் விளையாட்டு, தடயவியல் தொழில்நுட்பக் கல்வி ஆகிய துறைகளில் விரைவான முன்னேற்றத்தை  அடைந்து வருகின்றனர்.

அதேவேளையில் அவர்கள் தங்கள் பண்பாட்டையும் மரபுகளையும் பாதுகாக்கின்றனர் என்று இளையர் சமுதாயத்திற்கு பாராட்டுகளைக் கூறிக்கொண்டார் அவர்.

‘‘பல தலைமுறைகளை வறுமையின் பிடியில் சிக்கவைத்த, கல்வி கற்க விடாமல் சமூகத்தை இருளில் தள்ளிய நக்சல்வாதத்திலிருந்து நாடு விடுவிக்கப்பட உள்ளது.

நாட்டில் மார்ச் மாத இறுதிக்குள் நக்சல் பயங்கரவாதம் முடிவுக்கு வருவது உறுதி; அதில் மாற்றமில்லை,’’ என்றார் அமைச்சர்.

குறிப்புச் சொற்கள்