நாக்பூர்: இந்தியாவில் இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக மே 3ஆம் தேதி நடந்த நீட் தேர்வு, வினாத்தாள் கசிந்த விவகாரத்தால் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இம்முறை தவறு நேர்ந்துவிடக் கூடாது என்பதில் மத்திய கல்வி அமைச்சு தீவிரமாக இருந்தது. வினாத்தாள்கள் அனைத்தும் விமானப்படை விமானம், ஹெலிகாப்டர்கள் மூலம் எடுத்துச்செல்லப்பட்டன. அவற்றுக்குத் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், நாக்பூரைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த மறுதேர்விற்கு அபுதாபியில் உள்ள ஒரு பள்ளி தேர்வு மையமாக ஒதுக்கப்பட்டதாகத் தெரியவந்தது. இதனால் தலைசுற்றாத குறையாக அவர் அதிர்ச்சியடைந்தார்.
இத்தகவலை ஒன்இந்தியா உள்ளிட்ட பல ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.
அப்துல்லா முகமது தலிப் என்பவரின் குடும்பத்தினர், வெள்ளிக்கிழமை மாலை மகனின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்தபோது, அபுதாபியில் உள்ள ஒரு பள்ளி தேர்வு மையமாக அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அவரது தந்தை முகமது தலிப்பும் அவரது குடும்பத்தினரும் உடனடியாகத் தேசிய தேர்வு முகமை (NTA) உதவி எண்ணைத் தொடர்பு கொண்டதாகவும் இந்தப் பிரச்சினை குறித்து மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.
சனிக்கிழமை மாலைக்குள் ஒரு புதிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு வழங்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை சார்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
மற்றொரு மாவட்டத்திற்கு பயணம் செய்ய குறைந்த நேரமே உள்ளதாலும், இந்த எதிர்பாராத ஒதுக்கீடு மாணவருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதாலும், நாக்பூரையே தேர்வு மையமாக ஒதுக்கவேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நீட் மறுதேர்வை 22.70 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
இதில் உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 3.56 லட்சம் பேர் எழுதுகின்றனர். மராட்டியம் 2.23 லட்சம், ராஜஸ்தான் 2.03 லட்சம் பேர் எழுதுகின்றனர். இந்த மூன்று மாநிலங்களும் சேர்த்து 34 விழுக்காடு பங்கை வகிக்கின்றன. பீகார் 1.56 லட்சம், கர்நாடகம் 1.45 லட்சம், தமிழ்நாடு 1.42 லட்சம் மாணவ மாணவிகள் எழுத உள்ளார்கள்.
நீட் தேர்வுக் கட்டணத்தை மாணவர்களுக்குத் திருப்பிக் கொடுத்ததுடன் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு நேரம் கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

