புதுடெல்லி: மருத்துவ நுழைவுக்கான ‘நீட்’ முதுநிலைத் தேர்விற்கான உயிரியல் வினாத்தாள் கசிந்த வழக்கில், புனேயைச் சேர்ந்த மூத்த தவாரவியல் ஆசிரியையான மனிஷா குருநாத் மந்தாரே என்பவரை புலனாய்வுத்துறையினர் டெல்லியில் கைது செய்தனர்.
அவரிடம் அது தொடர்பாக புலனாய்வுத் துறை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.
மந்தாரே நீட்-யுஜி 2026 தேர்வு செயல்முறையுடன் தொடர்புடையவர் என்றும், தேசிய தேர்வு முகமையால் ஒரு வல்லுநராக நியமிக்கப்பட்டு, தாவரவியல் மற்றும் விலங்கியல் வினாத்தாள்களை அணுகும் வாய்ப்பைப் பெற்றிருந்தார் என்று என்று புலனாய்வுத்துறை அதிகாரிகள் கூறியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், புனேவைச் சேர்ந்த மனிஷா வாக்மரே என்பவர் மூலம் ‘நீட்’ தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களை அவர் திரட்டியதாக புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டினர். மனிஷா வாக்மரே ஏற்கெனவே மே 14ஆம் தேதி கைது செய்யப்பட்டிருந்தார்.
மந்தாரே தனது புனே இல்லத்தில் மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி வகுப்புகளை நடத்தி வந்ததாகவும், அப்போது அவர், தாவரவியல் மற்றும் விலங்கியல் தொடர்பான பல கேள்விகளை மாணவர்களுக்குத் தெரிவித்து, அவற்றைக் குறித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதாகவும் புலனாய்வுத்துறை தெரிவித்தது.
அந்த ஆசிரியர் வெளியிட்ட கேள்விகளில் பெரும்பாலானவை, மே 3 அன்று நடத்தப்பட்ட (தற்போது ரத்து செய்யப்பட்ட) நீட்-யுஜி 2026 வினாத்தாளுடன் ஒத்துப்போவதாக அந்த முகமை தெரிவித்தது.
வினாத்தாள் கசிவு வழக்கு தொடர்பாக, ஓய்வுபெற்ற வேதியியல் பேராசிரியர் பி.வி. குல்கர்னியை லாத்தூரில் கைது செய்ததாக சிபிஐ தெரிவித்த ஒரு நாள் கழித்து மனிஷா கைது செய்யப்பட்டுள்ளார்.

