விமானப்படை ஹெலிகாப்டர்களில் கொண்டு செல்லப்படும் ‘நீட்’ தேர்வு வினாத்தாள்

விமானப்படை ஹெலிகாப்டர்களில் கொண்டு செல்லப்படும் ‘நீட்’ தேர்வு வினாத்தாள்

2 mins read
94b2da0f-8f67-4159-b91b-ad1f3afda2f0
விமானப்படையின் எம்ஐ 17 ஹெலிகாப்டரில் வினாத்தாள்கள் கொண்டு செல்லப்பட உள்ளன. - கோப்புப் படம்: இந்திய விமானப்படை

புதுடெல்லி: ‘நீட்’ மறு தேர்வுக்கான வினாத்தாள் விமானப்படை ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்படுகிறது. இதன்மூலம் வினாத்தாள் கசிவு தடுக்கப்படும் என இந்தியக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அண்மையில் நடைபெற்ற மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு, சிபிஎஸ்இ தேர்வு ஆகியவற்றில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன.

கடந்த மாதம் ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிந்தது, தேர்வு எழுதியவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, எதிர்வரும் 21ஆம் தேதி மறுதேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கல்வித்துறை அதிகாரிகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, வினாத்தாள் கசிந்துவிடக் கூடாது என்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வினாத்தாளை நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லும் பணியில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்களை ஈடுபடுத்த இந்திய தற்காப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அனுமதி வழங்கியுள்ளார்.

விமானப்படையின் எம்ஐ 17 ஹெலிகாப்டரில் அவை கொண்டு செல்லப்பட உள்ளன. சீல் வைக்கப்பட்ட வினாத்தாள்கள், வட்டார மையங்களுக்குக் கொண்டு செல்லப்படும் என்றும் பாதுகாப்பாகவும் குறிப்பிட்ட நேரத்தில் வினாத்தாள் உள்ளிட்ட தேர்வுக்கான பொருள்களை கொண்டு சேர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், முதலில் நடத்தப்பட்ட ‘நீட்-யுஜி’ 2026 தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கல்வி அமைச்சு பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.

ஜூன் 21 அன்று நடைபெறவிருக்கும் மறுதேர்வானது, நம்பிக்கையை மீட்டெடுக்கும் ஒரு நடவடிக்கையாக முன்னிறுத்தப்படுகிறது.

“இதன் மூலம், வினாத்தாள் தயாரிப்பு, அதைத் தேர்வு மையங்களுக்குக் கொண்டு செல்வது ஆகிய நடவடிக்கைகள் பாதுகாப்பாகவும் வெளிப்படையாகவும் இருப்பதை உறுதிசெய்ய முடியும். மேலும், முறைகேடுகளுக்கும் இடமிருக்காது,” என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்