புதுடெல்லி: நாடு முழுவதும் நடைபெற்ற ‘நீட்’ தேர்வு வினாத்தாள் மோசடியில் தொடர்புடைய 14 பேர் மீது டெல்லி சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவுசெய்துள்ளது.
நடப்பாண்டு ‘நீட்’ தேர்வின்போது வினாத்தாள் கசிந்தது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனையடுத்து, தேசியத் தேர்வு முகமை (என்டிஏ) தேர்வை முழுமையாக ரத்துசெய்துவிட்டு மறுதேர்வை நடத்தியது.
இவ்விவகாரத்தில் அப்போதைய மத்தியக் கல்வி அமைச்சர் பதவி விலகிய நிலையில், வழக்கு மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், ‘நீட்’ வினாத்தாளைச் சட்டவிரோதமாகப் பெற்று, இடைத்தரகர்கள், பயிற்சி மையங்களுக்குப் பணத்திற்காக விநியோகித்ததாக சிபிஐ குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பாகச் சுமார் 20,000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையைச் சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது.
இதனைப் பரிசீலித்த டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குப்தா, குற்றஞ்சாட்டப்பட்ட 14 பேர் மீதும் குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்து உத்தரவிட்டார்.
மேலும், குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் வரும் 21ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த அவர் உத்தரவிட்டார். வரும் 25ஆம் தேதி முதல் இவ்வழக்கின் விசாரணை நாள்தோறும் நடத்தப்படும் என்றும் நீதிபதி அறிவித்தார்.
