சென்னை: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் மே 4ஆம் தேதி நடந்தது.
தமிழகத்தில் 1.50 லட்சம் மாணவ, மாணவியர் உட்பட நாடு முழுவதும் 22 லட்சம் பேர் பங்கேற்றனர்.
சென்னையில் 44 தேர்வு மையங்களில் 21,960 மாணவி மாணவியர் தேர்வு எழுதினர்.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நீட் நுழைவுத் தேர்வு ஞாயிறு மதியம் 2.00 முதல் மாலை 5.20 வரை நடந்தது.
கட்டுப்பாடுகள்
நீட் தேர்வில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, ஏற்கெனவே வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி காலை 11.30 முதல் மதியம் 1.30 மணி வரை தேர்வு மையத்துக்குள் செல்ல மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன்பின் வந்த மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
அடையாள அட்டை, ஹால் டிக்கெட் மறந்த மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
தேர்வுக் கூடத்திற்குள் செல்ல கைப்பேசி, கைக்கடிகாரம், உலோகத் தாயத்து, கொண்டை ஊசி, வெள்ளி அரைஞான் உள்ளிட்டவை அகற்றப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
ஒளி ஊடுருவும் தண்ணீர் பாட்டில்கள் மட்டும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது. மாணவியர் ஜடை பின்னலுக்கு அனுமதிக்கப்படவில்லை.
அவதி
சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரியில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்த நிலையில் அதே வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணமும் நடந்தது.
அங்கு வந்தவர்கள் குறுக்கும் நெடுக்குமாக சென்றதால் தேர்வு மையத்தைக் கண்டறிவதில் மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.
மற்ற இடங்களில் நீட் தேர்வுக்கு பெற்றோருக்கே அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இந்த மையத்தில் திருமணம் நடத்த எப்படி அனுமதி அளித்தார்கள் என காவலர்களிடம் பெற்றோர் வாக்குவாதம் செய்தனர்.
காவலர்களின் உதவிக்கரம்
அதுபோல, மதுரையில், தன் ஆதார் அட்டையை எடுத்து வர மறந்த மாணவரின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்து, ஆதார் அட்டையைப் பெற்று மாணவரைத் தேர்வுக் கூடத்துக்குள் அனுப்பி வைத்தார் பணியில் இருந்த காவலர் விஜயலட்சுமி.
காவலர்களின் ஆதரவுடன் பல மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.