வினாத்தாள் கசிந்ததால் ‘நீட்’ மருத்துவ நுழைவுத்தேர்வு ரத்து

வினாத்தாள் கசிந்ததால் ‘நீட்’ மருத்துவ நுழைவுத்தேர்வு ரத்து

2 mins read
மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு
fb17e094-a32b-4aa4-9f6f-328a6fa9f88d
மறுதேர்வு நடைபெறும் நாள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தேசியத் தேர்வு முகமை தெரிவித்துள்ளது. - கோப்புப்படம்: இந்துஸ்தான் டைம்ஸ்

புதுடெல்லி: வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்களை அடுத்து, மே 3ஆம் தேதி நடந்த இளநிலை மருத்துவக் கல்விக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு அதிகாரபூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மறுதேர்வு நடத்தப்படும் என்று தேசியத் தேர்வு முகமை அறிவித்திருக்கிறது.

முதற்கட்டக் கண்டுபிடிப்புகளின்படி, மே 3ஆம் தேதி தேர்வு நடப்பதற்கு முன்பே ராஜஸ்தான் மாநிலத்தில் பரவியதாகக் கூறப்படும் கையால் எழுதப்பட்ட வினாத்தொகுப்பிற்கும், அசல் வினாத்தாளுக்கும் இடையே குறிப்பிடத்தக்க அளவு ஒற்றுமைகள் இருந்தது தெரியவந்தது.

இது, தேசிய அளவிலான அந்த நுழைவுத் தேர்வு நடைமுறையின் நேர்மை குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.

தேசியத் தேர்வு முகமை, ராஜஸ்தான் காவல்துறையின் சிறப்புச் செயல்பாட்டுக் குழுவுடன் இணைந்து, வினாத்தாள் கசிவு எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்தும் அதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்தும் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.

தேர்வுக்கு முன்னதாகப் பயிற்சி மையங்கள், மாணவர் குழுக்கள் வழியாக வினாத்தாள் கசியவிடப்பட்டதா, அது பேரளவிலான மாணவர்களைச் சென்றடைந்ததா என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, மத்திய அரசாங்க அமைப்புகள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பிறகு, மே 3ஆம் தேதி நடத்தப்பட்ட ‘நீட்’ தேர்வை ரத்து செய்வதாகத் தனது சமூக ஊடகப் பக்கம் வழியாகத் தேசியத் தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

மேலும், ‘நீட்’ நுழைவுத்தேர்வு மீண்டும் நடத்தப்படும் என்றும் அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

வினாத்தாள் கசிந்தது தொடர்பில் மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரணை நடத்த இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

விசாரணை நடைபெற்று வருவதால், தேர்வெழுதிய மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் சமூக ஊடகங்களில் பரவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைத் தவிர்த்து, அதிகாரபூர்வத் தகவல்களை மட்டுமே நம்புமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

முந்தைய பதிவின்போதே சமர்ப்பிக்கப்பட்ட பதிவு விவரங்களும் தேர்வு மையங்களும் செல்லத்தக்கதாக இருக்கும் என்றும் புதிதாக விண்ணப்பம் செய்யவோ கூடுதல் கட்டணமோ செலுத்தத் தேவையில்லை என்றும் தேர்வு முகமை தெளிவுபடுத்தியுள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக இந்தியாவில் 551 நகரங்களிலும் வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் 5,400க்கும் அதிகமான மையங்களில் ‘நீட்’ நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. ஏறக்குறைய 2.279 மில்லியன் மாணவர்கள் அத்தேர்வை எழுதினர்.

குறிப்புச் சொற்கள்