நீட் வினாத்தாள் கசிவு: சகோதரர்கள் உட்பட 15 பேர் கைது

விசாரணையைத் தீவிரப்படுத்திய மத்திய புலனாய்வுத் துறை

நீட் வினாத்தாள் கசிவு: சகோதரர்கள் உட்பட 15 பேர் கைது

2 mins read
754666dc-607a-4cb4-b20f-701b7c1ef589
மருத்துவப் படிப்புக்கான நீட் வினாத்தாள் கசிந்த சம்பவம் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (மே 12) நாசிக் நகரில் உள்ள காவல்துறை அலுவலகத்திலிருந்து குற்றம் சாட்டப்பட்டவரை சிபிஐ (CBI) அலுவலத்துக்கு அதிகாரிகள் கூட்டிச் சென்றனர். - படம்: ஏஎன்ஐ

புதுடெல்லி: இந்தியாவில் இளநிலை மருத்துவக் கல்விக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிந்த சம்பவம் தொடர்பில் ராஜஸ்தானைச் சேர்ந்த மாங்கிலால், தினேஷ் பீவால் ஆகிய இரு சகோதரர்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில், மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் சுபம் கைர்னார் என்பவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

விசாரணையில் கிடைத்துள்ள தகவல்களின்படி, தேர்வு நடைபெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே ராஜஸ்தானின் சீகர் போன்ற பயிற்சி மையங்களுக்கு வினாத்தாள் கிடைத்துள்ளது.

வினாத்தாள் 30 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரையில் விற்கப்பட்டதாகத் தெரிகிறது. முன்கூட்டியே கசிந்த வினாத்தாளில் இருந்த வேதியியல் பாடத்தின் 120 கேள்விகள், அசல் வினாத்தாளுடன் ஒத்துப்போயுள்ளன. உயிரியல் பாடக் கேள்விகளிலும் அதிகப்படியான ஒற்றுமை காணப்பட்டுள்ளது.

“நாளை தேர்வில் இதுதான் வரும், விடுதி மாணவிகளுக்குக் கொடுங்கள்,” என்று ஒரு தந்தை தன் மகளுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி ஆதாரமாகச் சிக்கியுள்ளது.

நாசிக் அச்சகத்திலிருந்து குருகிராம் மருத்துவர் வழியாக இந்த வினாத்தாள் கசிந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. அங்கிருந்து ஜம்மு-காஷ்மீர், பீகார், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களுக்கும் வினாத்தாள் பரவியுள்ளது.

வினாத்தாள் கசிவு, முறைகேடுகள் காரணமாக, மே 3ஆம் தேதி கிட்டத்தட்ட 22,000 மாணவர்கள் எழுதிய ‘நீட்’ நுழைவுத் தேர்வு அதிகாரபூர்வமாக ரத்துசெய்யப்பட்டுள்ளது.

புதிய தேர்வு தேதி, திருத்தப்பட்ட அனுமதி அட்டைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பரவிய ஆவணங்கள் உண்மையான வினாத்தாள்களா என்பதையும், இந்தச் சங்கிலித் தொடர் மோசடியில் தொடர்புடைய ஏனையவர்களையும் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்