நீட் வினாத்தாள் கசிவு: 14 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு

நீட் வினாத்தாள் கசிவு: 14 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு

கோப்புப் படம்: ஐஎம்டிஎஸ்

22 Nov 2026 - 7:36 pm

2 mins read

புதுடெல்லி: ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், கைது செய்யப்பட்ட 14 பேர் மீது டெல்லி நீதிமன்றம் முறைப்படி குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.

அவ்வழக்கின் முக்கியக் கட்டமான சாட்சி விசாரணை வரும் நவம்பர் 25ஆம் தேதி முதல் தினசரி அடிப்படையில் நடைபெற உள்ளது.

கடந்த மே 3ஆம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ’நீட்’ நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தியா முழுவதும் ஏறக்குறைய 22 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். ஆனால், வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததைத் தொடர்ந்து, மே 12ஆம் தேதி தேசியத் தேர்வு முகமை அத்தேர்வை ரத்து செய்தது. பின்னர், ஜூன் 21ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்பட்டது.

இந்தத் தேர்வு முறைகேடு தொடர்பாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், தேசிய தேர்வு முகமையால் வினாத்தாள் தயாரிப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்த மனிஷா மந்தரே, பி.வி. குல்கர்னி, மனிஷா சஞ்சய் ஹவல்தார் ஆகிய மூன்று ஆசிரியர்களும் அடங்குவர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 14 பேரும் கடந்த 18ஆம் தேதி டெல்லி நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி அஜய் குப்தா முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அப்போது, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தங்களுக்கு எதிரான புகார்களை மறுத்து, தாங்கள் குற்றமற்றவர்கள் என வாதிட்டனர். இருப்பினும், சட்டபூர்வ விசாரணையை எதிர்கொள்ள அவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து, குற்றவியல் சதி, நம்பிக்கை மோசடி, ஆதாரங்களை அழித்தல், ஊழல் தடுப்புச் சட்டம்,

பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு) சட்டம் 2024 ஆகிய கடுமையான பிரிவுகளின்கீழ் 14 பேர் மீதும் நீதிமன்றம் சனிக்கிழமை (நவம்பர் 21) குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.

நவம்பர் 25 முதல் விசாரணை தொடங்கவுள்ளதால், இந்த வழக்கில் விரைவில் முக்கியத் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்