நீட் வினாத்தாள் கசிவு: ஆண்டுக்கு ரூ.100 கோடி வருவாய் ஈட்டும் பயிற்சி மைய அதிபர் கைது

நீட் வினாத்தாள் கசிவு: ஆண்டுக்கு ரூ.100 கோடி வருவாய் ஈட்டும் பயிற்சி மைய அதிபர் கைது

2 mins read
சிபிஐ விசாரணையில் அதிரடி
c30d63a1-a9ff-4824-b42d-3bb353e66a63
மகாராஷ்டிராவின் லத்தூரில் ‘ஆர்சிசி’ என்ற பெயரில் நீட் பயிற்சி மையம் நடத்தி வந்த சிவராஜ் ரகுநாத் மோதிகாவோங்கர். - படம்: மாலை மலர்

புதுடெல்லி: நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில், ஆண்டுக்கு ரூ.100 கோடி வருவாய் ஈட்டும் பிரபல பயிற்சி மைய அதிபரை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வுக்கு முன்னதாகவே அசல் வினாத்தாள் கசிந்தது அம்பலமானது.

மகாராஷ்டிராவில் கசிந்த வினாத்தாள் ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட பல மாநிலப் பயிற்சி மையங்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவின் லத்தூரில் ‘ஆர்சிசி’ என்ற பெயரில் நீட் பயிற்சி மையம் நடத்தி வந்த சிவராஜ் ரகுநாத் மோதிகாவோங்கர் என்பவர் தற்போது கைதாகியுள்ளார்.

தேர்வு நடப்பதற்கு 10 நாள்களுக்கு முன்பு (ஏப்ரல் 23) சிவராஜ் வினாத்தாளைப் பெற்றுள்ளார்.

அவரது கைப்பேசியில் இருந்து வினாத்தாள்களைச் சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

ஆரம்பத்தில் சைக்கிளில் சென்று துணைப்பாட வகுப்பு எடுத்துவந்த சிவராஜ், வெறும் 10 மாணவர்களுடன் வாடகை அறையில் இந்த மையத்தைத் தொடங்கினார்.

தற்போது புனே, நாசிக் எனப் பல கிளைகளுடன் 40,000 மாணவர்கள் பயிலும் அளவுக்கு, ஆண்டுக்கு ரூ.100 கோடி ஈட்டும் சாம்ராஜ்யமாக இது உயர்ந்துள்ளது.

முன்னதாக, வினாத்தாள் தயாரிப்புக் குழுவில் நீண்டகாலம் இருந்த புனே வேதியியல் பேராசிரியர் பி.வி. குல்கர்னி என்பவர் கைது செய்யப்பட்டார்.

இவர் சிறப்பு வகுப்பு என்ற பெயரில் மாணவர்களிடம் லட்சக்கணக்கில் சுருட்டி ரகசிய வகுப்புகளை நடத்தியது தெரியவந்துள்ளது.

இந்த மாபெரும் மோசடிக் கட்டமைப்பின்கீழ் மேலும் பலர் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜூன் 21ஆம் தேதி நீட் மறுதேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்