தேசியத் தேர்வு முகமைமீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி

‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரம்

தேசியத் தேர்வு முகமைமீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி

2 mins read
a1689989-bb56-4dfb-af1d-2e06ed0ba6d7
தனது முன்னைய தவறுகளிலிருந்து தேசியத் தேர்வு முகமை பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்று இந்திய உச்ச நீதிமன்றம் சாடியுள்ளது. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: மருத்துவ நுழைவுத்தேர்வு (நீட்) வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், தேசியத் தேர்வு முகமை தனது முன்னைய தவறுகளில் இருந்து இன்னும் முறையான பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்று இந்திய உச்ச நீதிமன்றம் சாடியுள்ளது.

‘நீட்’ தேர்வை முறைகேடின்றி நடத்த தேசியத் தேர்வு முகமைக்குப் பதிலாக முற்றிலும் புதிய, வலுவான, தன்னாட்சி பெற்ற அமைப்பை உருவாக்கக் கோரிய மனுக்கள் குறித்து மத்திய அரசு, தேசியத் தேர்வு முகமை, மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) ஆகியவை விளக்கம் அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் 2024ஆம் ஆண்டு வழங்கிய பரிந்துரைகளைச் செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வரும் வியாழக்கிழமைக்குள் (மே 28) உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்யவும் தேசியத் தேர்வு முகமைக்கு உத்தரவிடப்பட்டது.

“முன்னைய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாதது வருத்தமளிக்கிறது. இதற்கு முன்பும் இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. அப்போது அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவின் பரிந்துரைகளை ஏற்பதாகத் தேர்வு முகமை தெரிவித்திருந்தது. அவற்றைச் செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வரும் வியாழக்கிழமைக்குள் (மே 28) தேசியத் தேர்வு முகமை உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்,” என்று நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, அலோக் ஆராதே அடங்கிய அமர்வு திங்கட்கிழமை உத்தரவிட்டது.

முன்னதாக, தேசியத் தேர்வு முகமையின் செயல்பாடுகளை ஒட்டுமொத்தமாக மறுசீரமைப்பதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் மத்திய அரசு ஒரு குழுவை அமைத்திருந்தது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்ற அக்குழு எடுத்த திட்டவட்டமான நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக அரங்கேறும் வினாத்தாள் கசிவுகளால் கிட்டத்தட்ட 2.27 மில்லியனுக்கும் மேற்பட்ட மாணவர்களின் அடிப்படை உரிமைகள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்று அகில இந்திய மருத்துவச் சங்கங்களின் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.

ஆகையால், புதிய தன்னாட்சி அமைப்பு ஒன்று முறையாக உருவாக்கப்படும்வரை, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் இணையப் பாதுகாப்பு, தடயவியல் வல்லுநர்கள் அறிஞர் அடங்கிய உயர்நிலைக் கண்காணிப்புக் குழுவை அமைத்து, இனிவரும் மறுதேர்வுகளை எவ்வித கசிவுகளும் இன்றித் தீவிரமாக மேற்பார்வையிட வேண்டும் என்று அம்மனுவில் கோரப்பட்டுள்ளது.

முன்னதாக, மே 3ஆம் தேதி நடத்தப்பட்ட ‘நீட்’ தேர்வு, வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21ஆம் தேதி மீண்டும் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்