புதுடெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமா் ஜவகர்லால் நேரு, இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக வாழ்ந்த மிகப்பெரிய சொகுசு வீடு ரூ.1,100 கோடிக்கு (160 மில்லியன் வெள்ளி) விற்பனையாகவுள்ளது.
அதற்கான சட்டப்பூர்வ பதிவு நடைமுறைகள் நிறைவடையும் கட்டத்தில் உள்ளதாக இந்திய ஊடகமான தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
டெல்லியில் உள்ள இந்தியக் கேட்டைச் சுற்றியுள்ள மொத்தம் 28 சதுர கிலோமீட்டா் பரப்பளவை இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரிட்டிஷ் கட்டடக் கலைஞா் எட்வின் லுட்யன்ஸ் வடிவமைத்தாா். அதனால் இந்தப் பகுதி அவரது பெயரால் அழைக்கப்படுகிறது.
அந்தக்காலத்தில் பிரிட்டிஷ் அதிகாரிகளைத் தங்க வைப்பதற்காக இந்த இடங்கள் வடிவமைக்கப்பட்டன. இங்குள்ள கிட்டத்தட்ட 3,000 சொகுசு வீடுகள் மத்திய அரசுக்குச் சொந்தமானவை.
அவற்றில் கிட்டத்தட்ட 600 தனியாா் சொகுசு வீடுகள் மற்றும் குடியிருப்புகள் நாட்டின் பெரும் செல்வந்தர்களின் குடும்பத்தாருக்குச் சொந்தமானவை.
இதில் நேரு வாழ்ந்த வீட்டை பிரபல மென்பானம் தயாரிக்கும் ஆலை அதிபர் வாங்கியிருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அதன் பத்திரப் பதிவுக்கு முந்தைய சட்டப்பூர்வ ஆவண சரிபாா்ப்பு மற்றும் பதிவுப்பணிகள் டெல்லியில் உள்ள பிரபல சட்ட நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இது நிறைவடைய இரண்டு மாதங்கள்வரை ஆகலாம் என்று டெல்லி வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அண்மையில் இந்தச் சட்ட நிறுவனம் சொகுசு வீடு தொடர்பாகப் பொது அறிவிப்பு விளம்பரம் ஒன்றை வெளியிட்டது.
அதில் குறிப்பிடப்பட்ட உரிமையாளர்கள், ராஜஸ்தான் அரசக் குடும்ப வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.
முன்னர் வாடகைக்கு விடப்பட்ட அந்த சொகுசு வீடு தற்போது காலியாக உள்ளது. இதன் மொத்த பரப்பளவு 3.7 ஏக்கர். கிட்டத்தட்ட 24,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த சொகுசு வீடு மூன்று தளங்களைக் கொண்டுள்ளது.
ரூ.1,100 கோடிக்கு இந்த சொகுசு வீடு வாங்கப்பட்டால் அது இந்தியாவிலேயே அதிக விலைக்குப் பதிவான மிகப்பெரிய குடியிருப்பு சொத்துப் பரிவர்த்தனையாக இருக்கும்.