காணாமற்போன 6 நாள்களுக்குப்பின் நேப்பாள வழிகாட்டி உயிருடன் மீட்பு

காணாமற்போன 6 நாள்களுக்குப்பின் நேப்பாள வழிகாட்டி உயிருடன் மீட்பு

2 mins read
9bdf90b6-35bf-420d-a8eb-8c34959a2971
ஹிலாரி தாவா ஷெர்பா, ஜூன் 4ஆம் தேதி, எவரெஸ்ட் அடிவார முகாமிற்கு அருகே சாகர்மாதா மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டார். - படம்: தெம்பா ‌ஷெரி ‌ஷெர்ப்பா, ஃபேஸ்புக்

காத்மாண்டு: எவரெஸ்ட் சிகரத்தில் காணாமற்போய் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்பட்ட நேப்பாள வழிகாட்டி ஹிலாரி தாவா ஷெர்பா, ஆறு நாள்களுக்குப்பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

அவர் அடிவார முகாம் நோக்கித் தவழ்ந்து வந்தபோது மீட்கப்பட்டதாகவும் பின்னர் ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த மாதம் (மே) 29ஆம் தேதி பிரிட்டிஷ் வீரர் கிறிஸ் திராலுடன் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட ஹிலாரி, மறுநாள் கீழிறங்கும் பாதையில் சிறிது நேரம் ஓய்வெடுத்ததாகத் தெரிகிறது. தமக்காகக் காத்திருக்காமல் பயணத்தைத் தொடரும்படி அவர் கேட்டுக்கொண்டதாகத் திரால் கூறினார்.

“வழியில் உயிர்வாயு இன்றித் தவித்த போலந்து நாட்டு மலையேறியைக் காப்பாற்ற முயன்றதால், இக்கட்டான சூழல் நிலவியது. மோசமான வானிலையால் 5 நாள் பயணம் 11 நாள்களாக நீடித்தது,” என்றார் கிறிஸ் திரால்.

“ஏற்கெனவே நூற்றுக்கணக்கான முறை ஏறியிறங்கிய அனுபவமுள்ள எனது வழிகாட்டி ஹிலாரியைத் தேடி மீண்டும் மேலே செல்வதா, உயிருக்குப் போராடும் சக மலையேற்ற வீரருக்கு உதவுவதா என்ற இக்கட்டான சூழல் எனக்கு ஏற்பட்டது,” என்று கிறிஸ் கூறினார்.

மீட்புக் குழுக்கள் ஷெர்ப்பா ஹிலாரியைத் தேடியும் அவரைக் காண முடியவில்லை. இருப்பினும் அவர் தாமே தனியாகப் போராடிக் கீழே இறங்கிவந்து உயிர் தப்பியுள்ளார்.

முன்னதாக, ஹிலாரி தாவா இறந்துவிட்டதாகக் கருதிய கிறிஸ் திரால், ஜூன் 3ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் இரங்கல் காணொளியை வெளியிட்டிருந்தார். அதில், ஹிலாரியை இமயமலையின் புலி என்றும் அன்பான மாமனிதர் என்றும் அவர் உருக்கத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பருவத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்துள்ள வேளையில், இந்தியர் இருவர் உட்பட ஐவர் உயிரிழந்துவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்