தேர்தல் ஆணையம், பாஜக மீது நேதாஜி பேரன் குற்றச்சாட்டு

1 mins read
0b6b3cd0-a868-4b72-a8a0-8324cac0eeb0
சந்திரகுமார் போஸ். - படம்: மாலை மலர்

புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த நடவடிக்கை குழப்பத்தை விளைவிக்கும் குறைபாடுள்ள செயல்முறை என நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பேரன் சந்திரகுமார் போஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை பொது மக்களிடையே வெறும் குழப்பத்தையும் அவதியையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய செயல்முறையின்படி, ஒருவர் வாக்காளர் பட்டியலில் தனது பெயரைத் தக்கவைத்துக்கொள்ள உரிய ஆதாரங்களைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் முன்பு முன்னிலையாகி அளிக்க வேண்டும்.

இந்த செயல்முறையை தானும் பின்பற்றியதாகச் செய்தியாளர்களிடம் பேசும்போது குறிப்பிட்ட அவர், முன்னதாக அதிகாரிகள் தமக்கே நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறினார்.

இந்தத் திருத்தப் பணி மிக அவசரமாகவும் முறையான திட்டமிடுதல் இன்றியும் செயல்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர், பாஜக உத்தரவின் பேரில் தேர்தல் ஆணையம் இத்தகைய தன்னிச்சையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் குற்றம்சாட்டினார்.

இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்கப்படாதது ஒரு குழப்பமான நிலையை உருவாக்கியுள்ளது என்றும் வயதான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நிற்பதால் உடல்நலம் பாதிக்கப்படுவதைப் பார்க்கும்போது வருத்தமாக உள்ளது என்றும் திரு சந்திரகுமார் போஸ் தெரிவித்துள்ளார்.

பாஜகவில் சில காலம் உறுப்பினராக இருந்த இவர், கடந்த 2023ஆம் ஆண்டு அக்கட்சியை விட்டுவிலகினார்.

குறிப்புச் சொற்கள்