உத்தரப் பிரதேசம்: திருமணக் காணொளியை முதன்முதலாகப் பார்ப்போர், மாப்பிள்ளையின் தன்னம்பிக்கையைக் கண்டு வியந்து போவர். காரணம், வேத மந்திரங்களை மாப்பிள்ளையே ஓதித் தமது திருமணச் சடங்குகளை நடத்தியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆடவர் ஒருவர், தமது திருமணத்தில் பூசாரியாக மாறிப் புதுமை படைத்துள்ளார். ஹரித்வாரின் குஞ்சா பஹதூர்பூரில் இந்த வித்தியாசமான திருமண விழா நடந்துள்ளது.
தாம் பலகாலமாகவே மந்திரங்களைப் படித்து வருவதாக விவேக் குமார் என்ற அந்த ஆடவர் கூறியுள்ளார். மணப்பெண் பக்கத்தில் அமர்ந்தபடி விவேக் வேத மந்திரங்களை ஓதத் தொடங்கியதும் திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள், உறவினர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
சமூக ஊடகத்தில் இந்த அரிய தருணத்தைக் காட்டும் காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டதை அடுத்து, பலரும் மாப்பிள்ளையின் செயலைப் பாராட்டி வருகின்றனர்.
மாப்பிள்ளை மந்திரங்களை ஓத, பின்னர் மணப்பெண்ணும் அவருடன் சடங்குகளில் சேர்ந்துகொள்கிறார். இதை பண்டிதருடன் வந்திருந்தோரும் வியந்து பார்த்தனர்.
இணையவாசிகள் பலரும் புதுமணத் தம்பதியருக்குத் தங்களின் வாழ்த்துகளை மனதாரத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த இளம் வயதில் தம் திருமணத்தில் சடங்குகளை நடத்திவைத்து, மந்திரங்களை ஓதியதன்வழி ஒருவர் தமது கலாசாரத்திற்கு விசுவாசமாக இருப்பதன் முக்கியத்துவத்தைத் தாம் வலியுறுத்த விரும்புவதாக அந்த இளையர் தெரிவித்துள்ளார்.
“நவீனக் கற்றலுக்கிடையே நாம் நமது கலாசார வேர்களை மறவாமல் இருக்க வேண்டும்,” என்று விவேக் விளக்கினார்.

