சென்னை: தமிழகத்தின் புதிய தொழில் நகரமாக, வேகமாக வளர்ச்சி கண்டு வரும் ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சூளகிரி தாலுகாவில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 2,000 ஏக்கரில் இந்த விமான நிலையம் அமையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவைக்கு அடுத்தபடியாக, ஓசூரும் தொழில் நகரமாக மாறி வருகிறது. ஓசூரில் பல்வேறு வாகன, மின்னணுப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
மேலும், மின் வாகனங்கள், மின்னணு உதிரிப் பாகங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளைத் தொடங்க பல்வேறு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. எனினும், ஓசூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் தொழில் முன்னேற்றத்துக்கு முக்கியத் தடையாக உள்ளது.
தற்போது முதலீட்டாளர்கள், தொழில் நிறுவனப் பிரதிநிதிகள், ஓசூருக்கு அருகே உள்ள கர்நாடக மாநிலம் பெங்களூரு வரை விமானத்தில் சென்று அங்கிருந்து தரைவழியே ஓசூரைச் சென்றடைகின்றனர்.
பெங்களூருவிலும் போக்குவரத்து நெரிசல் முக்கியப் பிரச்சினையாக உள்ளது. எனவே, தொழில் முதலீடுகளை ஈர்க்க வேண்டுமெனில், ஓசூர் மட்டுமல்லாமல், அது அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என நிபுணர்கள் தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இதையடுத்து, புது விமான நிலையத்துக்காக ஓசூருக்கு அருகிலுள்ள தனியார் விமான ஓடுபாதை, சூளகிரி தாலுகா, தேன்கனிக்கோட்டையில் உள்ள தோகரை அக்ரஹாரம் உள்ளிட்ட ஐந்து இடங்கள் அடையாளம் காணப்பட்டன. அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், இறுதியாக சூளகிரி தேர்வு செய்யப்பட்டது.
அண்மையில் நடைபெற்ற தமிழக அரசின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
இதையடுத்து, அங்கு அடுத்தக்கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

