எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்பை மீறி மக்களவையில் நிறைவேறிய புதிய சட்ட மசோதா

2 mins read
8174f292-a509-4070-bbb5-c8040e50d87f
எதிர்க்கட்சியினர் மக்களவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு, முழக்கங்கள் எழுப்பினர். - படம்: தினமணி

புதுடெல்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தின் பெயரை மாற்றியுள்ளது மத்திய அரசு.

அத்திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, ‘வளர்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புச் சட்டம்’ என்ற பெயரும் சூட்டப்பட்டுள்ளது.

இதற்கான சட்ட மசோதாவை மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் மக்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 16) அறிமுகம் செய்தார்.

இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

புதிய மசோதாவின்படி, இனி ஒரு நிதியாண்டில் நூறு நாள் வேலைவாய்ப்பு என்பது 125 நாளாக உயர்த்தப்பட்டிருந்தாலும், இனி இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு மட்டுமே 100% நிதி ஒதுக்காது என்றும் மாநில அரசுகள் 40% நிதியளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஏற்க முடியாது என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்தன.

இந்நிலையில், வியாழக்கிழமை (டிசம்பர் 18) மக்களவையில் ‘வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு’ சட்ட மசோதா (’விபி - ஜி ராம் ஜி’) வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதன் நகலை கிழித்தெறிந்தனர். இதனால் பரபரப்பு நிலவியது.

புதிய மசோதாவால் மாநிலங்களின் நிதிச்சுமை அதிகரிக்கும் என்றும் இத்திட்டத்துக்கு வைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி பெயரை நீக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற மக்களவையில் வியாழக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டன.

புது மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் தற்போதைய கோரிக்கை.

இதை முன்வைத்து அவர்கள் மக்களவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு, முழக்கங்கள் எழுப்பினர்.

அப்போது சில எம்பிக்கள் மசோதாவின் நகலைக் கிழித்து வீசினர்.

இதையடுத்து, நாட்டு மக்கள் அனைவரின் செயல்பாடுகளையும் பார்த்துக் கொண்டிருப்பதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா கூறினார்.

இந்நிலையில், பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் இந்தப் புதிய சட்ட மசோதா மக்களவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. அடுத்து, மாநிலங்களவையில் இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும்.

குறிப்புச் சொற்கள்