சென்னை: தமிழ்நாட்டில் கோயில் பணியாளர்களை தேர்வு செய்யப் புதிய தேர்வு வாரியம் அமைக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் அறிவித்துள்ளார்.
மேலும், கோயில் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தப்படும் என 106 அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.
“ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 64 கோயில்களில் ரூ.125 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். சேதமடைந்துள்ள 150 கோயில்கள், இதர 152 கோயில்களில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெறும்,” என்றும் திரு ரமேஷ் கூறினார்.
கோவை, தேனி, திருவள்ளூர், திருப்பூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள முக்கியக் கோயில்களில் ரூ.22.25 கோடி மதிப்பீட்டில் புதிய ராஜகோபுரங்கள் கட்டப்படும் என்றார் அவர்.
மருதமலை, குன்றத்தூர், சமயபுரம், குலசேகரன்பட்டினம் ஆகிய கோயில்களில் பக்தர்களுக்காகப் புதிய மண்டபங்கள், இளைப்பாறும் கூடங்கள், முடிக் காணிக்கை மண்டபம் கட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் ரூ.8 கோடியில் பாதுகாப்பு அறைகள், பாலூட்டும் அறைகள் மற்றும் வரிசை மண்டபங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சரின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதேபோல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.11 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
பக்தர்களின் வசதிக்காகத் திருச்செந்தூரில் 4 சிற்றுந்துகளும், திருநெல்வேலி சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு 2 பேருந்துகளும் கட்டணமில்லாச் சேவையாக இயக்கப்படும்.
பழுதடைந்த 25 தேர்கள் ரூ.16 கோடியில் சீரமைக்கவும் 100 கோயில் குளங்கள் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, மருதமலையில் புதிய அன்னதானக் கூடங்கள், பிரசாதம் தயாரிக்கும் கூடங்கள் அமைக்கப்படும்.
கோயில் பணியாளர்களின் வாரிசுகளுக்குக் கல்லூரிப் படிப்பில் முன்னுரிமை, 50 விழுக்காட்டுக் கட்டணச் சலுகை வழங்கப்படும் என்று அமைச்சர் ரமேஷ் கூறினார்.


