புதுடெல்லி: தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (என்பிஎஸ்) சந்தாதாரர்களுக்கு அதிகப்படியான பயன்கள் கிடைக்கும் வகையில், ஓய்வூதிய நிதி ஒழுங்காற்றுதல், மேம்பாட்டு ஆணையம் (பிஎஃப்ஆா்டிஏ) அதிரடி மாற்றங்கள் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஓய்வுபெறும் வயதை எட்டிய பிறகும், சந்தாதாரர்கள் தங்கள் வசதிக்கேற்ப திட்டத்தில் நீடிக்கவோ அல்லது வெளியேறவோ முடியும். முதிர்வு காலத்தில் மொத்தப் பணத்தையும் ஒரே தவணையில் எடுக்காமல், தேவைக்கேற்ப பிரித்து பெற்றுக்கொள்ளும் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
சந்தாதாரர்களின் முதலீட்டுக்கு அதிகப் பாதுகாப்பு அளிப்பதோடு, சந்தை மாற்றங்களுக்கேற்ப கூடுதல் லாபம் கிடைக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது.
சுருக்கமாக, சந்தாதாரர்கள் ஓய்வூதியக் காலத்தில் அதிக நிதியைப் பெறுவதற்கும், தங்களின் விருப்பத்துக்கேற்ப திட்டத்தை நிா்வகிப்பதற்கும் கூடுதல் நெகிழ்வுத்தன்மையை வழங்கும் புதிய மாற்றங்களின் சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி ஓய்வூதியக் கணக்கில் உள்ள மொத்தப் பணம் ரூ.8 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், அதை முழுமையாக ஒரே தவணையில் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
இதற்கென ‘ஆனியுட்டி’ எனும் மாதாந்திர ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்யத் தேவையில்லை (முன்பு இந்த வரம்பு ரூ.5 லட்சமாக இருந்தது).
கணக்கில் உள்ள நிதி ரூ.12 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால், இனி 80 விழுக்காட்டுத் தொகையை மொத்தமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
மீதமுள்ள 20 விழுக்காட்டுத் தொகையை மட்டும் மாதாந்திர ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்தால் போதும் (முன்பு 60 விழுக்காட்டு மட்டுமே கையில் கிடைக்கும் நிலை இருந்தது).
தொடர்புடைய செய்திகள்
ஓய்வுபெற்ற பிறகும் முதலீட்டைத் தொடர விரும்பினால், இனி 85 வயது வரை தொடரலாம். (முன்பு 75 வயது வரை மட்டுமே அனுமதி இருந்தது).
ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை நிதி வைத்துள்ளவர்கள், மொத்தப் பணத்தையும் ஒரே நேரத்தில் எடுக்காமல், தொடக்கத்தில் ரூ.6 லட்சம் வரை எடுத்துக்கொண்டு, மீதமுள்ள பணத்தை அடுத்த 6 ஆண்டுகளுக்குப் பிரித்துப் பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சந்தாதாரர் அல்லது குடும்பத்தினரின் எந்த விதமான மருத்துவச் செலவுக்கும் பணம் எடுக்கலாம்.
செலுத்திய தொகையில் 25 விழுக்காடு வரை பிணையாக வைத்துக் கடன் பெறும் வசதி முதன்முறையாக அளிக்கப்பட்டுள்ளது.
வீடு கட்ட அல்லது வாங்கவும் பகுதித் தொகையைப் பெறலாம்.
சந்தாதாரர் இறக்க நேரிட்டால் மனைவிக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். மனைவியும் இல்லாவிட்டால் பெற்றோருக்கு வழங்கப்படும்.
சந்தாதாரர் காணாமல் போனால், குடும்பத்திற்கு உடனடியாக 20 விழுக்காடு இடைக்கால நிவாரணம் வழங்கப்படும்.
இந்த மாற்றங்கள் மூலம் என்பிஎஸ் (NPS) திட்டம் அதிக நெகிழ்வுத்தன்மையுடனும் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் தரும் வகையிலும் மாற்றப்பட்டுள்ளது.

