தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
இந்தியாவில் திங்கட்கிழமை முதல் ஜிஎஸ்டி சலுகைகள் நடப்புக்கு வருகின்றன. இதனால் பல பொருள்களில் விலைகள் குறையும்.

இந்தியப் பொருளியலில் புதிய அத்தியாயம் தொடங்குகிறது: பிரதமர் மோடி

2 mins read
83c8168d-1a2f-4644-9af6-8f9d212ac70c
ஜிஎஸ்டி குறைப்பு திங்கட்கிழமை முதல் நடப்புக்குவர உள்ள நிலையில் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியா 25 கோடிப் பேரை ஏழ்மையில் இருந்து மீட்டுள்ளது. திங்கட்கிழமை (செப்டம்பர் 22) முதல் நடப்புக்கு வர உள்ள சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) சலுகைகளால் மக்கள் மேலும் பயன் பெறுவார்கள். இந்தியப் பொருளியலில் புதிய அத்தியாயம் தொடங்குகிறது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால் 99 விழுக்காட்டுப் பொருள்களின் விலை குறைகின்றன. தற்போது, வணிகத்தில் இருந்த சிக்கல்கள் நீக்கப்பட்டுள்ளன. பல்வேறு பெயர்களில் ஆன மறைமுக வரிகளால் ஏற்பட்ட சிக்கல் ஜிஎஸ்டியால் அகன்றன என்றார் அவர்.

இந்திய நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று (செப்டம்பர் 21) உரையாற்றினார். அதில், வரி விகிதங்களில் அறிவிக்கப்பட்ட சலுகை, ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்து விளக்கினார்.

ஜிஎஸ்டி வரிக் குறைப்பானது நடுத்தரக் குடும்பங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஏழைகள், பெண்கள், குழந்தைகள், விவசாயிகள் தங்களுக்குத் தேவையான பொருள்களைக் குறைந்த விலையிலேயே வாங்கலாம் என்று அவர் கூறினார்.

இனி ஜிஎஸ்டியில் 8 முதல் 18 விழுக்காடுவரைதான் வரி இருக்கும். உணவு, மருந்து, பல வீட்டு உபயோகப் பொருள்கள் விலை நாளை முதல் குறையும் என்றார் மோடி.

இந்திய மக்கள் அனைவரும் இணைந்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் மக்களுக்குத் தேவையான பொருள்களைத் தயாரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

உள்நாட்டுப் பொருள்கள் சிறந்த தரத்துடன் தயாரிக்கப்பட வேண்டும். அவை உலக தரத்துடன் போட்டிபோடும் வகையில் இருப்பது அவசியம். இதன்மூலம் இந்தியா வேகமாக வளர்ச்சி அடையும் என்றார் மோடி.

அனைத்து மாநிலங்களும் வளர்ச்சியை நோக்கி வேகமாகச் செல்ல வேண்டும். மாநிலங்கள் உற்பத்தியை ஊக்குவித்து, முதலீட்டிற்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்