திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானம் அமைந்துள்ள பகுதியில், திரைப்படப் படப்பிடிப்பு நடந்ததாக வெளியான தகவல் கேரள மாநிலத்தில் புது விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது.
சபரிமலையில் திரைப்படப் படப்பிடிப்புகளை நடத்த கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. குறிப்பாக, சன்னிதானப் பகுதியில் இந்த உத்தரவு தீவிரமாகச் செயல்படுத்தப்படுகிறது. மேலும், கோவில் வளாகத்தில் கைப்பேசி பயன்படுத்தவும் அனுமதியில்லை.
இந்நிலையில், கடந்த ஜனவரி 14ஆம் தேதி சபரிமலையில் மகர விளக்குப் பூசை நடைபெற்றது. அப்போது சன்னிதானப் பகுதியில் ஒரு மலையாளத் திரைப்படத்துக்கான படப்பிடிப்பு அனுமதியின்றி நடத்தப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவில் நிர்வாக வாரியத் தலைவர் ஜெயகுமார், படப்பிடிப்புக்கு அனுமதி கோரப்பட்டதாகவும் ஆனால் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இதை மீறி சன்னிதானத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், தான் பம்பையில் மட்டும் படப்பிடிப்பை நடத்தியதாகச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் இயக்குநர் அனுராஜ் மனோகர் விளக்கம் அளித்துள்ளார். சன்னிதானத்தில் படப்பிடிப்பு நடத்த, தான் விரும்பியபோதும் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால், செய்தியாளர் என்ற போர்வையில் அவர் சன்னிதானம் பகுதியில் படப்பிடிப்பை நடத்தியதாக ஒரு தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சபரிமலையில் தங்கம் திருடப்பட்டது, நெய் விற்பனையில் முறைகேடு என அடுத்தடுத்து சர்ச்சைக்குரிய விவகாரங்கள் தலைதூக்கி வருகின்றன. தற்போது திரைப்படப் படப்பிடிப்பு நடந்ததாகப் புது சர்ச்சை வெடித்துள்ளது.

