சூரியனின் மேற்பரப்பை விட அதன் வெளிப்புற வளிமண்டலப் பகுதி எவ்வாறு மில்லியன் கணக்கான டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்பத்துடன் உள்ளது என்பது பல காலமாக அறிவியலாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
மேலும், தொடர்ச்சியான ஆற்றல் உமிழ்வுகள் மூலம் அதிக அளவிலான ஆற்றலை இழந்த போதிலும், அப்பகுதி எவ்வாறு தொடர்ந்து அதே வெப்பநிலையில் நீடிக்கிறது என்பதும் விடை தெரியாத கேள்வியாக இருந்தது.
இந்தியாவின் முதலாவது சூரிய ஆய்வு விண்கலமான ‘ஆதித்யா-எல்1’ சேகரித்த புதிய தரவுகள், அக்கேள்விகளுக்கான பதில்களை வழங்கியுள்ளதாக இந்திய வானியற்பியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
அக்கண்டுபிடிப்புகள் ‘ஆஸ்ட்ரோஃபிசிகல் ஜர்னல் லெட்டர்ஸ்’ எனும் ஆய்விதழில் வெளியாகியுள்ளன.
இந்திய வானியற்பியல் கழகத்தைச் சேர்ந்த முன்னணி சூரிய வானியற்பியல் அறிஞர் பேராசிரியர் ஆர். ரமேஷ் தலைமையிலான குழு அந்த ஆய்வை மேற்கொண்டது.
பூமியிலிருந்து நாம் காணக்கூடிய சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை கிட்டத்தட்ட 5,500 டிகிரி செல்சியஸ் ஆகும். ஆனால், மையப்பகுதியை விட்டு வெகுதொலைவில் உள்ள வெளிப்புறத்தின் வெப்பநிலை கிட்டத்தட்ட மில்லியன் டிகிரி செல்சியசாக உயர்கிறது; சில நேரங்களில் இது 40 மில்லியன் டிகிரி செல்சியஸ் வரைகூட அதிகரிக்கக்கூடும்.
சூரியப் பிழம்புகள் (solar flares), கொரோனா பிளாஸ்மா உமிழ்வுகள் (CMEs) போன்ற தீவிர விண்வெளி நிகழ்வுகள் இந்த வெளிப்புறப் பகுதியில்தான் உருவாகின்றன எனப் பேராசிரியர் ரமேஷ் கூறினார்.
“ஒவ்வொரு பிளாஸ்மா உமிழ்வின் போதும் சூரியன் பெருமளவு ஆற்றலை இழக்கும், அந்த ஆற்றலை மீண்டும் பெறாவிட்டால், சூரிய மண்டலத்தின் மையத்தில் உள்ள சூரியன் தன் அனைத்து ஆற்றலையும் இழந்துவிடும்; இதனால், பூமி மீள முடியாத உறைநிலைக்குச் சென்றுவிடும்,” எனப் பேராசிரியர் ரமேஷ் விளக்கினார்.
ஆனால், அது நிகழாததால், சூரியனின் வெளிப்புறப் பகுதி தன் வெப்பநிலையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்கு ஏதோவொரு ‘செயல்முறை’ (mechanism) உள்ளது என்பது தெளிவாகிறது. அறிவியலாளர்கள் இதற்கு இரு முக்கியக் காரணங்களைக் குறிப்பிடுகின்றனர்.
சூரிய வளிமண்டலத்தில் ஒன்றோடொன்று பிணைந்துள்ள காந்தப்புலக் கோடுகள் அறுபட்டு, மீண்டும் இணைவதாகும்.
பின்னப்பட்ட கூந்தலைப் போல இருக்கும் இந்தக் காந்தப்புலக் கோடுகள் முறியும்போது பிளாஸ்மா உமிழ்வு ஏற்பட்டு, பெருமளவு காந்தமேற்றப்பட்ட வாயு மேகங்கள் விண்வெளியில் வீசப்படுகின்றன.
ஆனால், இந்தக் கோடுகள் சில மணிநேரங்களுக்குள் மீண்டும் இணைந்து, சூரியன் இழந்த ஆற்றலை உடனடியாக நிரப்பிவிடுகிறது எனத் திரு ரமேஷ் கூறினார்.
அந்த ஆய்வுக்கட்டுரையில், இந்த இரண்டு அமைப்புகளும் சூரியனின் வெளிப்பகுதிக்கு எவ்வளவு ஆற்றலை வழங்குகின்றன என்பதைத் துல்லியமாகக் கணித்துள்ளனர்.
சூரிய வளிமண்டலத்தில் ஆற்றல் உருவாகும் வழிமுறைகள் குறித்த எதிர்கால ஆய்வுகளுக்கு இத்தரவுகள் ஒரு முக்கிய வழிகாட்டியாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


