தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டெல்லியில் காற்றுத்தரம் மோசமான நிலையை எட்டியது

2 mins read
மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை
2250b4d2-a17e-47ea-a4ff-bfc460e1a837
புதுடெல்லி காற்று மாசுபாட்டாலும் பனிமூட்டத்தாலும் சூழப்பட்டுள்ளது. அதையடுத்து அங்கு சாலை மற்றும் விமானப் போக்குவரத்துகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் காற்றின் தரநிலை கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு முறை மோசமான நிலையை எட்டியுள்ளது.

இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, புதுடெல்லி அரசு, காற்று மாசுபாட்டைக் குறைக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

டிசம்பர் 17ஆம் தேதிக்கான காற்றுத்தரக் குறியீடு 400ஐ தாண்டிவிடும் என்று டிசம்பர் 16ஆம் தேதி பின்னிரவில் முன்னுரைக்கப்பட்டது. இப்போது அங்கு காற்றுத்தரக் குறியீடு 424ஐ எட்டியுள்ளது. இது மிகவும் மோசமான காற்றுமாசுபாடு. இதனையடுத்து, இதனைக் கட்டுப்படுத்த என்ன செய்வது என்பது குறித்து ஆராய அரசாங்க அதிகாரிகள் குழு ஒன்று அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தியது.

இந்தக் காற்று மாசுபாட்டால் பொதுமக்கள் நலன் பெரிதும் பாதிக்கப்படக் கூடும் என்ற அச்சத்தால், சிறுவர், சிறுமியர்களுக்கான பள்ளி வகுப்புகளை அதாவது ஐந்தாம் வகுப்பு வரை தேவையேற்பட்டால் ஒழிய இணைய வகுப்புகளில் கலந்துகொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது. இப்போது அது 10, 12ஆம் வகுப்பு மாணவர்களைத் தவிர அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இந்த முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அரசாங்க ஊழியர்களின் வேலை நேரமும் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கி குறிப்பிட்ட நேரத்தில் முடிவுறும் வழக்கமான முறையில் இருந்து, ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட நேரங்களில் வேலை பார்க்கும் முறையும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசாங்க அலுவலகங்களில் 50 விழுக்காட்டு ஊழியர்கள் வீட்டில் இருந்தே தங்கள் பணிகளைச் செய்யமுடியும்.

அதேபோல், அங்கு வெப்பநிலையும் 5.9 டிகிரி செல்சியசுக்குக் குறைந்துள்ளது. அதனால் பனிமூட்டமும் அதிகரித்துள்ளதால் சாலை, விமானப் போக்குவரத்துகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

காற்றுத் தரக்குறியீட்டு மேலாண்மை ஆணையம், காற்றுமாசுபாடு, பனிமூட்டம் வெகுவாக அதிகரித்து காற்றும் வீசாததால் டெல்லியின் பல இடங்களில் கட்டுமானப் பணிகளுக்குத் தடைவிதித்துள்ளது.

மேலும், குழந்தைகளையும் மூச்சுப் பிரச்சினை, இதயநோய், நாட்பட்ட நோயுள்ளவர்களையும் வீட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர்க்குமாறு ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

வடஇந்தியாவின் பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விவசாய நிலங்களின் கழிவுகள் சட்டத்திற்குப் புறம்பாக எரிக்கப்படுவதால் உண்டாகும் புகை, கட்டுமானங்களில் இருந்து வரும் தூசு ஆகியவற்றால் ஏற்படும் காற்று மாசுபாட்டோடு குளிர்காலங்களில் பனிமூட்டமும் சேர்ந்து கொள்வதால், குளிர்காலங்களில் வட மாநில மக்கள் கடுமையான காற்று மாசுபாட்டை எதிர்நோக்குகின்றனர்.

புதுடெல்லியில் இந்தப் பருவ காலத்தில், ஆக மோசமாகக் கடந்த நவம்பர் மாதத்தில் காற்றுத்தரக் குறியீடு 494ஆகப் பதிவானது.

குறிப்புச் சொற்கள்