தீபாவளிக்குள் சாலைகளை சீரமைக்க உத்தரவிட்ட புதிய டெல்லி முதல்வர் அதிஷி

தீபாவளிக்குள் சாலைகளை சீரமைக்க உத்தரவிட்ட புதிய டெல்லி முதல்வர் அதிஷி

1 mins read
bfa033c2-3ba9-4008-8294-b71027f88a00
டெல்லி முதல்வர் அதிஷி - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: தீபாவளிக்குள் குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை சீர் செய்ய வேண்டும் என்று டெல்லியின் புதிய முதல்வரான அதிஷி உத்தரவிட்டுள்ளார்.

டெல்லி முதல்வராகப் பதவி ஏற்றுள்ள அதிஷி ஞாயிற்றுக் கிழமை அமைச்சர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

தீபாவளிக்குள் குண்டும் குழியும் இல்லாத வகையில் சாலைகளின் தரம் உயர்த்தப்படும். இதற்காக, டெல்லி அரசின் ஒட்டுமொத்த அமைச்சரவையும் சாலைகளில் இருப்பார்கள் என அதிஷி அறிவித்திருந்தார்.

அதன்படி, திங்கட்கிழமை காலை அதிஷி உள்ளிட்ட டெல்லி மாநில அமைச்சர்கள் தெருக்களில் உள்ள மோசமான சாலைகள் குறித்த ஆய்வு மேற்கொண்டனர். அத்துடன் போர்க்கால அடிப்படையில் சாலைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

இது தொடர்பாக டெல்லி மாநில முதல்வர் அதிஷி எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ஒட்டுமொத்த டெல்லி அரசின் அமைச்சரவை காலை ஆறு மணியில் இருந்து சேதம் அடைந்த சாலைகளை ஆய்வு செய்தது. மோடி மில் மேம்பாலம், என்.எஸ்.ஐ.சி. ஒக்லா, சிராக் டெல்லி போன்ற இடங்களில் சேதம் அடைந்த சாலைகளை சரி செய்தேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

“மக்கள் சாலைகளில் உள்ள பள்ளத்தால் கடும் போக்குவரத்து நெருக்கடியை சந்தித்து வந்தனர். போர்க்கால அடிப்படையில் சாலைகளை சரி செய்ய வேண்டும் என நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அரவிந்த் கெஜ்ரிவால் வழிக்காட்டலின்படி தீபாவளிக்குள் பள்ளம் இல்லாத சாலைகளை உறுதி செய்ய நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்