புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நான்கு மாடி குடியிருப்பாளர் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது 11 பேர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சனிக்கிழமை (ஏப்ரல் 19) அதிகாலை நேரத்தில் கட்டடம் இடிந்து விழுந்ததாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன. மாண்டவர்களில் மூவர் குழந்தைகள் என்று தெரிவிக்கப்பட்டது.
இடிந்து விழுந்த கட்டடம் புதுடெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது. அக்கட்டடத்தில் வாழ்பவர்கள் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்.
கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்புப்படையினர் தேடிவருகின்றனர். 11 பேரை அதிகாரிகள் உயிருடன் மீட்டனர். கடுமையாகக் காயமடைந்த ஐவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எதனால் கட்டடம் இடிந்து விழுந்தது என்பது குறித்த உடனடி விவரங்கள் வெளியாகவில்லை.
சட்டவிரோதமாகக் கட்டடம் கட்டப்பட்டதால்தான் இச்சம்பவம் ஏற்பட்டது, இதற்கு அனுமதி கொடுத்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி அமைச்சர் கபில் மிஷ்ரா சூளுரைத்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அதிபர் திரெளபதி முர்முவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
அதிபர் முர்மு தங்கியுள்ள மாளிகையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் சம்பவம் நிகழ்ந்த இடம் உள்ளது.