காற்றுத் தூய்மைக்கேட்டைக் குறைக்கப் புதுடெல்லி புதிய முயற்சி

காற்றுத் தூய்மைக்கேட்டைக் குறைக்கப் புதுடெல்லி புதிய முயற்சி

1 mins read
dcf88d91-b156-4753-8e5c-e16ecb20d42a
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் காற்றுத் தூய்மைக்கேடு நெடுங்காலமாகவே பெரிய பிரச்சினையாக உள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்தியத் தலைநகரான புதுடெல்லியில் பெட்ரோலாலும் இயற்கை எரிவாயுவாலும் இயங்கும் புதிய இருசக்கர வாகனங்களுக்கும் சிறிய வகை லாரிகளுக்கும் அடுத்த ஈராண்டுகளில் தடை விதிக்கப்படவிருக்கிறது.

காற்றுத் தூய்மைக்கேட்டைக் கட்டுப்படுத்த இந்திய மாநிலமொன்று எடுத்த ஆகக் கடுமையான நடவடிக்கைகளில் ஒன்றாக அது பார்க்கப்படுகிறது.

மின்சாரத்தால் இயங்கும் சிறிய லாரிகளுக்கும் மூன்று சக்கரப் பயணிகள் வாகனங்களுக்கும் மட்டுமே புதுடெல்லி அடுத்த ஆண்டு ஜனவரி முதல்தேதியிலிருந்து உரிமம் வழங்கவிருக்கிறது.

அதேபோன்று மின்சாரத்தால் செயல்படும் இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே 2028ஆம் ஆண்டு ஏப்ரல் முதல்தேதியிலிருந்து உரிமம் வழங்கப்படும். மாநில முதல்வர் ரேகா குப்தா அந்தத் தகவல்களைத் திங்கட்கிழமை (ஜூன் 29) ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டார்.

150 பில்லியன் ரூபாய் ($2.05 பில்லியன்) பெறுமான மின்வாகனக் கொள்கைத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து அவரின் கருத்துகள் வந்துள்ளன.

அந்தத் திட்டத்தின்படி, மூன்று மில்லியன் ரூபாய் வரை மதிப்புக்கொண்ட மின்கார்களுக்கும் சரக்கு வாகனங்களுக்கும் சாலை வரி, பதிவுக் கட்டணம் முதலியவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

நகரத்தின் காற்றுத் தூய்மைக்கேட்டில் ஏறக்குறைய 23 விழுக்காட்டுக்கு வாகனங்களிலிருந்து வெளியாகும் புகையே காரணம் என்று புதுடெல்லி கூறுகிறது.

குளிர்காலத்தின்போது வாகனப் புகை, கட்டுமானத் தூசு, பயிர்களின் எச்சங்களை எரிப்பதால் ஏற்படும் புகை முதலியவற்றில் உள்ள மாசுப்பொருள்கள் அதிக அளவில் ஆகாயத்திலேயே தங்கிவிடுகின்றன. அதனால் புதுடெல்லியின் வான்பகுதி நச்சுத்தன்மை கலந்த சாம்பல் நிறமாகக் காட்சியளிப்பது வழக்கம்.

குறிப்புச் சொற்கள்