அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் இருந்து உலகளாவிய வான்வழிப் போக்குவரத்தை மேலும் எளிதாக்கும் வகையில், அகமதாபாத் விமான நிலையத்தில் பல்வேறு நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அந்த விமான நிலையத்தில், ‘ஹப் அண்ட் ஸ்போக்’ எனும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஒரு தொழில் கட்டமைப்பில், அனைத்துப் பொருள்கள், தகவல்கள், அல்லது போக்குவரத்து ஒரே மையத்துக்கு முதலில் வந்துசெல்வது ‘ஹப் அண்ட் ஸ்போக்’ என்று குறிப்பிடப்படுகிறது.
ஏற்கெனவே, வாரணாசி, அமிர்தசரஸ் விமான நிலையங்களில் இந்த வசதி உள்ளது. தற்போது அனைத்துலகப் பயணிகளின் வசதிக்காக அகமதாபாத் விமான நிலையத்திலும் இந்த வசதி நிறுவப்பட்டுள்ளது.
அகமதாபாத்தின் வர்த்தக வளர்ச்சியை மேம்படுத்தவும் 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான குஜராத்தின் முயற்சிக்கு வலுசேர்க்கவும் இந்த வான்வழி இணைப்புப் புதுமை பெருமளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய பொது விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு, இணையமைச்சர் முரளிதர் மோஹோல் ஆகியோர் இந்தப் புதிய திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்துள்ளனர்.
இப்புதிய கட்டமைப்பின்கீழ், அகமதாபாத்தில் இருந்து அனைத்துலகப் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் உடைமைகளைப் பதிவு செய்து ஒப்படைப்பது (செக்-இன்), சுங்கம், குடியுரிமை (Immigration) சோதனைகளைத் தங்களுடைய உள்நாட்டு விமான நிலையத்திலேயே நிறைவு செய்து கொள்ளலாம்.
டெல்லி போன்ற மற்ற விமான நிலையங்களைப் பயன்படுத்தும்போது அப்பயணிகள் மீண்டும் தங்களது உடமைகளைப் பெறவோ அல்லது மறுபாதுகாப்புச் சோதனைகளுக்கு உட்படவோ தேவையில்லை. பயணிகள் பதிவு செய்த உடைமைகள் நேரடியாக அவர்களின் இறுதி இலக்குக்கே அனுப்பப்படும்.
மத்திய அரசின் உடான் (UDAN) திட்டத்தின் கீழ், நாட்டின் விமானப் போக்குவரத்துச் சேவையை அனைத்துலகத் தரத்திற்கு உயர்த்துவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. டெல்லி வழியாக இணைப்புச் சேவையை வழங்கும் இரண்டு அன்றாட விமானங்கள் மூலம், அகமதாபாத்தில் இருந்து 15 அனைத்துலக இடங்களுக்குக் குறைந்த காத்திருப்பு நேரத்தில் பயணிகள் இனி எளிதாகப் பயணம் செய்ய முடியும்.
அசாம் விமான நிலையத்தில் புதிய வசதி
இதனிடையே, விமானங்கள் பாதுகாப்பாகத் தரையிறங்குவதை உறுதிசெய்ய ‘துல்லிய அணுகுமுறை விளக்கு அமைப்பு’ (PALS - Precision Approach Lighting System) என்ற புதிய தொழில்நுட்பம் அசாம் மாநில கௌஹாத்தியில் உள்ள லோக்ப்ரியா கோபிநாத் பர்தோலோய் அனைத்துலக விமான நிலையத்தில் அறிமுகமாகியுள்ளது.
வடகிழக்கு இந்தியாவின் முக்கியமான நுழைவாயிலாக விளங்கும் கௌஹாத்தியில், பருவமழைக்காலம், அடர் மூடுபனி காலங்களில் போதிய வெளிச்சமின்மை காரணமாக விமானப் போக்குவரத்தில் தொடர் சவால்கள் நிலவி வந்தன.
இதனை எதிர்கொள்ளும் வகையில், ஏற்கெனவே 180 மீட்டராக இருந்த அணுகுமுறை விளக்கு அமைப்பை தற்பொழுது 570 மீட்டராக நீட்டித்து மேம்படுத்தியுள்ளனர்.


