விமானப் பயணங்களில் ஒரே ஒரு கைப்பெட்டி: விதிமுறை அறிமுகம்

2 mins read
4645770f-bc26-4b52-ae0f-3c096feefb1a
இந்தியாவில் உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 12 விழுக்காடு அதிகரித்து உள்ளது. - கோப்புப் படம்: இணையம்

இந்தியாவின் விமான நிலையங்களில் பணிகளை துரிதப்படுத்தவும் பாதுகாப்புச் சோதனைகளை எளிமைப்படுத்தவும் அந்நாட்டின் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு அமைப்பும் (BCAS) மத்திய தொழிலியல் பாதுகாப்புப் படையும் (CISF) புதன்கிழமை (டிசம்பர் 25) புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்துள்ளன.

உள்நாட்டிலும் வெளிநாடுகளுக்கும் பயணம் மேற்கொள்வோர் ஒரே ஒரு கைப்பை அல்லது கைப்பெட்டியை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும் என்பது அவற்றில் முக்கியமான விதிமுறை.

இந்தியாவில் கடந்த பல மாதங்களாக விமானப் பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்து வருகிறது. கடந்த நவம்பர் மாதம் மட்டும் 1.42 கோடிப் பேர் உள்நாட்டில் விமானப் பயணம் செய்துள்ளனர். 2023 நவம்பருடன் ஒப்பிடுகையில், இது ஏறத்தாழ 12 விழுக்காடு அதிகம்.

அதேபோல, இவ்வாண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை 14.64 கோடிப் பேர் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்துள்ளதாக விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகத்தின் (DGCA) ஆக அண்மையத் தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 13.82 கோடிப் பேர் உள்நாட்டு விமானப் பயணங்களை மேற்கொண்டனர். இது 5.91 விழுக்காடு ஆண்டு வளர்ச்சியையும் 11.90 விழுக்காடு மாதாந்தர வளர்ச்சியையும் காட்டுவதாக இயக்குநரகம் குறிப்பிட்டு உள்ளது.

விமான நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பாதுகாப்பையும் கட்டுப்பாடுகளையும் அதிகரிக்க இந்திய அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அவற்றில் ஒன்றுதான் கைப்பெட்டிகளுக்கான கட்டுப்பாடு. ஒரு கைப்பெட்டிக்கு மேல் இருந்தால் அது சரக்குப் பெட்டியாகக் கருதப்படும். விதிகளை மீறுவோரிடம் கூடுதல் கட்டணம் அல்லது அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இண்டிகோ, ஏர் இந்தியா போன்ற விமான நிறுவனங்கள் புதிய விதிமுறைகளுக்கு இணங்க தங்களது பயணப் பெட்டிக் கொள்கையைத் திருத்தி உள்ளன.

ஏர் இந்தியா விமானங்களில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கான பயணத்தின்போது ஏழு கிலோ எடையுள்ள ஒரே ஒரு கைப்பெட்டி மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. வர்த்தக வகுப்புப் பயணிகளுக்கு 10 கிலோ வரை அனுமதிக்கப்படுகிறது.

இண்டிகோ விமானங்களில் 7 கிலோ கைப்பெட்டியுடன் 3 கிலோ அளவுக்கு மடிக்கணினி போன்ற சொந்தப் பொருள்கள் அனுமதிக்கப்படுகின்றன.

கைப்பெட்டிகள் அதிகம் இருந்தால் பாதுகாப்புச் சோதனைகளில் தாமதம் ஏற்படுகிறது. அதனைக் குறைக்கும் முயற்சியாக புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இருப்பினும், இவ்வாண்டு மே 2ஆம் தேதிக்கு முன்னதாக விமானப் பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்தோர் புதிய விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்