பாட்னா: பீகாரில் வரும் வியாழக்கிழமை (நவம்பர் 20) புதிய அரசு பதவியேற்கவுள்ளது. மாநிலத் தலைநகர் பாட்னாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க காந்தி விளையாட்டுத் திடலில் பதவியேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.
இருப்பினும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் பத்தாவது முறையாக முதல்வராகப் பதவியேற்பாரா என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மட்டும் இன்னும் வெளியாகவில்லை.
பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் புதிய அரசு அமைவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது உரையாற்றிய பிரதமர் மோடி, “புதிய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் பதவியேற்புக்கு மீண்டும் வருவேன்,” என்று உறுதியளித்திருந்தார்.
திங்கட்கிழமை (நவம்பர் 17) அமைச்சரவையைக் கலைத்த நிதிஷ் குமார், தனது பதவி விலகல் கடிதத்தை ஆளுநர் ஆரிஃப் முகமது கானிடம் சமர்ப்பித்தார்.
இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகள் இணைந்து அடுத்த முதல்வர் மற்றும் அமைச்சரவை குறித்த முடிவுகளை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
243 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களில் வெற்றிபெற்று, மிகப்பெரிய பெரும்பான்மையைப் பெற்றது.
பாஜக அதிகபட்சமாக 89 இடங்களில் வெற்றிபெற்றது. அதைத் தொடர்ந்து நிதிஷ் குமாரின் ஜேடியு 85 இடங்களைப் பெற்றது.
தொடர்புடைய செய்திகள்
மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் எல்ஜேபி 19 இடங்களை வென்றது. இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 5 இடங்களையும் மற்றும் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 4 இடங்களையும் வென்றன.
ஆர்ஜேடி தலைமையிலான எதிர் கூட்டணி 35 இடங்களை மட்டுமே வென்றது.
2020 தேர்தலில் 50க்கும் குறைவான எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்ததால் குறைவான அமைச்சர்களைப் பெற்ற ஐக்கிய ஜனதா தளம், இம்முறை அமைச்சரவையில் அதிக இடங்களைக் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பீகாரில் ஆட்சி அமைப்பது தொடர்பாகப் பாஜகவின் உயர்மட்டத் தலைவர்களைச் சந்திக்க டெல்லி சென்ற ஜேடியு செயல் தலைவர் சஞ்சய் குமார் ஜா ஞாயிற்றுக்கிழமை நிதிஷ் குமாருடன் பேசினார்.
இந்நிலையில், எல்ஜேபி கட்சி புதிய அரசாங்கத்தில் சேர ஆவலுடன் இருப்பதாக சிராக் பஸ்வான் கூறினார். அதே நேரம் எல்ஜேபி துணை முதல்வர் பதவியை எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா கட்சிகளும் அமைச்சரவையில் இடம் கேட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

