புதுடெல்லி: இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை (பிப்ரவரி 13) புதிய வருமான வரி மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
வரும் 2025-26 நிதியாண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தைக் கடந்த வாரம் அவர் தாக்கல் செய்திருந்தார். அப்போது, வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது.
அப்போது, வருமான வரிச் சட்டத்தை எளிமையாக்கும் வகையில் புதிய மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் நிர்மலா அறிவித்திருந்தார்.
அதன்படி, வியாழக்கிழமை புதிய மசோதாவைத் தாக்கல் செய்து பேசிய அவர், “இப்போது நடப்பிலுள்ள வருமான வரிச் சட்டம் இயற்றப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதால், அதனை எளிமையாக்கும் வகையில் புதிய மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பழைய சட்டத்திலுள்ள ஏராளமான சொற்கள் மாற்றப்பட்டு, படிப்பவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையானதாக மாற்றப்பட்டுள்ளன,” என்றார்.
எடுத்துக்காட்டாக, 1961ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்திலுள்ள முந்திய ஆண்டு, மதிப்பீட்டு ஆண்டு என்ற சொற்கள் மாற்றப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக புதிய மசோதாவில் வரி ஆண்டு எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் திருவாட்டி நிர்மலா குறிப்பிட்டார்.
புதிய வருமான வரி மசோதாவானது 536 பிரிவுகள், 23 அதிகாரங்கள், 622 பக்கங்களைக் கொண்டுள்ளது. தற்போதைய வருமான வரிச் சட்டமானது 298 பிரிவுகளையும் 880 பக்கங்களையும் கொண்டுள்ளது. அதிகாரங்களின் எண்ணிக்கையில் மாற்றமில்லை.
ஆயினும், இப்போதைய சட்டத்தில் 14 அட்டவணைகள் இடம்பெற்றுள்ள நிலையில், புதிய சட்டத்தில் அந்த எண்ணிக்கை 16ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய மசோதா நடைமுறைப்படுத்தப்பட்டால் மத்திய நேரடி வரிகள் வாரியத்திற்கு (CBDT) கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படும் எனச் சொல்லப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அதாவது, புதிய மசோதாவின் 533வது சட்டப்பிரிவின்கீழ், மத்திய நேரடி வரிகள் வாரியம் வரி நிர்வாக விதிகளை உருவாக்கவும் மினனிலக்க வரிக் கண்காணிப்பு அமைப்புகளை நடைமுறைப்படுத்தவும் முடியும் எனக் கூறப்படுகிறது.
வருமான வரிச் சட்ட மறுஆய்வு தொடர்பில் உரிய பங்காளிகளிடமிருந்து 6,500 பரிந்துரைகளை வருமான வரித் துறை பெற்றுள்ளது.
அமைச்சர் நிர்மலா தாக்கல் செய்துள்ள புதிய வருமான வரி மசோதா அடுத்ததாக நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படலாம் எனத் தெரிகிறது.