பெங்களூரு: கர்நாடகாவின் பெங்களூரில் இருக்கும் சர்ஜாபூர் பகுதியில் 1,050 ஏக்கரில் புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்காவை அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
தகவல் தொழிநுட்ப நகரம் என அழைக்கப்படும் பெங்களூருவில் ஏராளமான தகவல் தொழிநுட்ப நிறுவனங்கள் உள்ளன. இவற்றில், கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடகா - தமிழக மாநில எல்லையில் உள்ள ஓசூர் அருகே சர்ஜாபூரில் புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்காவை அமைக்கிறது அம்மாநில அரசு. இதற்காக சர்ஜாபூர், பிக்கனஹள்ளி, எஸ்.மேடஹள்ளி, அதிகா கல்லஹள்ளி, சொல்லேபுரா, முர்தநல்லுார் கிராமங்களில் நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றைக் கையகப்படுத்தும் பணியில் கர்நாடகத் தொழில் வளர்ச்சிக் கழகம் ஈடுபட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு, நிதி, தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய துறைகளில், தொடக்க நிலையில் இருக்கும் நிறுவனங்களை ஊக்குவிப்பதன் மூலம், இளம் தொழில் முனைவோரை ஈர்க்கும் திட்டங்களை இந்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் எம் பி பாட்டீல் முன்னெடுத்து வருகிறார்.
வரும் பிப்ரவரியில் நடைபெறும் முதலீட்டாளர்கள் சந்திப்புக்கு முன்பு, புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்கா தொடர்பான திட்டம் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.