நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டப் பேரவைக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களில் சில நிறைவுற்ற நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவற்றைக் காணொளி மூலம் தொடங்கி வைத்தார். அப்போது மேலும் சில புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அந்தப் புதிய திட்டங்களின் மதிப்பு ரூ.7,600 கோடியாகும்.
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்கில்ஸ் (ஐஐஎஸ்), மும்பை, மகாராஷ்டிரா வித்யா சமிக்ஷா கேந்திரா, 10 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளைப் பிரதமர் மோடி புதன்கிழமை திறந்து வைத்தார்.
நாக்பூரில் உள்ள டாக்டர் பாபா சாஹிப் அம்பேத்கர் அனைத்துலக விமான நிலையத்தை மேம்படுத்துவது, சீரடி விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைப்பு முனையக் கட்டுமானம் ஆகிய பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி, அடிக்கல் நாட்டப்பட்டுள்ள புதிய திட்டங்களால் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படும் என்று கூறினார்.


