‘ஏஐ’ தொழில்நுட்பத்தால் புதிய வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்: ரிசர்வ் வங்கி ஆய்வில் தகவல்

‘ஏஐ’ தொழில்நுட்பத்தால் புதிய வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்: ரிசர்வ் வங்கி ஆய்வில் தகவல்

2 mins read
e5d6311d-42fa-4b17-a118-98d075ea7834
பூனம் குப்தா. - படம்: இந்து பிஸினஸ்லைன்

மும்பை: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் தாக்கத்தால் வேலைவாய்ப்பு பறிபோய்விடுமோ என அஞ்சத் தேவையில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் பூனம் குப்தா தெரிவித்துள்ளார்.

‘ஏஐ’ தொழில்நுட்பம் வேலைகளைப் பறிக்காது என்றும் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.

‘ஏஐ’ தொழில்நுட்பம் வேலைவாய்ப்புச் சந்தையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் தொடர்பாக ரிசர்வ் வங்கி அண்மையில் ஓர் ஆய்வு மேற்கொண்டது என்றும் அதன்மூலம் இந்தியாவில் வேலைவாய்ப்பில் எதிர்மறைத் தாக்கம் ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது என்றும் பூனம் குப்தா தெரிவித்தார்.

நாட்டில் உற்பத்தித்திறன் அதிகரித்துள்ளது என்றும் வேலைவாய்ப்புகள் தொடர்பாக மற்ற குறியீடுகள் நேர்மறையான திசையைச் சுட்டுகின்றன என்றும் அவர் சொன்னார்.

பொதுவாக, புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகும்போது வேலைவாய்ப்புச் சந்தையில் சில மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு எனக் குறிப்பிட்ட அவர், சில சமயங்களில் பழைய வேலைகளுக்கு அவசியமின்றிப் போகலாம் என்று சுட்டிக்காட்டினார்.

“எனினும், பல புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் ஒட்டுமொத்தத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை,” என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

வேலைச் சந்தையில் இத்தகைய மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்கமுடியாத ஒன்று என்ற பூனம் குப்தா, இத்தகைய மாற்றங்களை எதிர்கொண்டு சமாளிப்பதே தற்போது சவாலாக உருவெடுத்துள்ளது என்றும் சொன்னார்.

இன்றைய இளையர்கள் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தி, புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தத் தயாராக வேண்டும் என்றும் ஒரு துறையில் வேலை வாய்ப்புகள் குறைந்தாலும், மற்றொரு துறையில் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்