புதிய மைல்கல்: முப்படை அணுவாயுதத் திறனை முழுமையாக எட்டிய இந்தியா

புதிய மைல்கல்: முப்படை அணுவாயுதத் திறனை முழுமையாக எட்டிய இந்தியா

படம்: என்டிடிவி

05 Oct 2026 - 1:04 pm

2 mins read

புதுடெல்லி: இந்தியாவின் பாதுகாப்புப் படைகள் தங்களது அணுவாயுதத் திறனைத் தொடர்ந்து நவீனமயமாக்கி, விரிவாக்கம் செய்து வருவதாக அனைத்துலக அணுசக்தி விஞ்ஞானிகளின் அமைப்பான ‘புல்லட்டின் ஆஃப் தி அட்டாமிக் சயின்டிஸ்ட்ஸ்’ (Bulletin of the Atomic Scientists) தனது அண்மைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தற்போதைய மதிப்பீட்டின்படி, இந்தியாவிடம் ஏறக்குறைய 190 அணுகுண்டுகள் வரை இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

எதிரிகளின் தாக்குதலை முறியடித்து, திருப்பித் தாக்கும் திறனை உறுதி செய்யும் ‘முப்படை அணுவாயுதத் திறன்’ (Nuclear Triad) அதாவது தரை, வான், கடல் வழியாக அணுவாதங்களைச் செலுத்தும் ஆற்றலை இந்தியா முழுமையாக எட்டியுள்ளது.

வான்வழித் தாக்குதல்

விமானங்கள் முதல் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் போதுமான அளவு உள்ளன.

ஃபிரான்சின் மிராஜ் 2000, ஜாகுவார் போர் விமானங்கள் அணுவாயுதங்களைச் சுமந்து செல்லக்கூடிய முதன்மைத் தளங்களாக விளங்குகின்றன. எதிர்காலத்தில் ரஃபேல் விமானங்கள் இப்பங்கை முழுமையாக ஏற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தரைவழி ஏவுகணைகள்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘அக்னி’ ஏவுகணைத் தொடர் இந்தியாவின் முக்கியப் பலமாகும். இதில் பிருத்வி-II, அக்னி-1 முதல் அக்னி-5 வரையிலான ஏவுகணைகள் அடங்கும். 5,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம் பாயக்கூடிய அக்னி-5 ஏவுகணை, ஒரே நேரத்தில் பல இலக்குகளைத் தாக்கும் நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கடற்படைத் திறன்

ஐஎன்எஸ் அரிகந்த் (INS Arihant), ஐஎன்எஸ் அரிகாட் (INS Arighaat) ஆகியவற்றைத் தொடர்ந்து, அண்மையில் ஐஎன்எஸ் அரிதாமன் (INS Aridhaman) என்ற மூன்றாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் கடற்படையில் சேர்க்கப்பட்டதன்மூலம், இந்தியாவின் கடல்சார் அணுவாயுதத் திறன் மேலும் பலமடைந்துள்ளது.

இந்தியா தனது அணுவாயுதப் பலத்தைப் பெருக்கினாலும், ‘முதலில் அணுவாயுதத்தைப் பயன்படுத்த மாட்டோம்’ என்ற தனது நீண்டகால வெளியுறவுக் கொள்கையில் உறுதியாக உள்ளது.

இருப்பினும், தன் மீது நடத்தப்படும் எந்தவொரு அணுவாயுதத் தாக்குதலுக்கும் உடனடியாகவும் மிகக்கடுமையான பதிலடி கொடுக்கக்கூடிய ‘இரண்டாம் கட்டத் தாக்குதல்’ ஆற்றலை இந்தியா தயார்நிலையில் வைத்துள்ளது என்பதை மேற்குறிப்பிட்ட அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

குறிப்புச் சொற்கள்